Published : 29 Jan 2019 11:09 AM
Last Updated : 29 Jan 2019 11:09 AM

ஆக்கப்பூர்வமான வகுப்பறை அமைப்போம்!

அண்மையில் மாநிலங்களவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தேசிய அளவில் கல்வியின் தரம் கடுமையாக வீழ்ந்திருப்பதால், ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்களின் படிப்பறிவைச் சோதித்து அவர்களை வடிகட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இதனால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் அபாயத்துக்குள்ளாகி இருக்கிறது.

6-14 வயதிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கல்வியைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் 2009-ல் அமலுக்கு வந்தது. இது இந்தியக் கல்வி அமைப்பை அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு உந்தித் தள்ளியது. அதே நேரத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியதுபோல் கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் பின்னடைவு காணப்படுகிறது.

என்.சி.இ.ஆர்.டி., ப்ரதம் உள்ளிட்ட பல்வேறு தேசிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கணிதத் திறன், அறிவியல் திறன், வாசிப்புத் திறன் ஆகியவற்றில் சர்வதேசத் தரத்தோடு ஒப்பிடுகையில் நமது  எட்டாம் வகுப்பு மாணவரின் சராசரி அறிவுத் திறனானது கொரியாவில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவரின் அளவுக்குத்தான் உள்ளது.

தொலைதூரத்தில் ஒளி

ஆகையால், நம்முடைய கல்வி அமைப்பைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்காக, ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்களை வடிகட்டினால் கல்வித் தரம் உயர்ந்திடுமா?  வருடம் முழுவதும் நிகழ்த்தப்படும் கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டுவராமல் ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் தேர்வு முறையில் மட்டும் அதிரடி மாற்றங் களைக் கொண்டுவந்தால் போதுமா?

2017-ல் நடத்தப்பட்ட தேசியச் சாதனைக் கணக்கெடுப்பு, இன்றும் வீட்டுப்பாடம் எழுதப்படும் விதத்தை அளவுகோலாக வைத்தே, 73 சதவீத இந்திய ஆசிரியர்கள், மாணவர்களின் திறனை மதிப்பிடுகிறார்கள் என்று தெரிவிக்கிறது. இதைவிடவும் பரிதாபகரமான விஷயம் என்னவென்றால், செயல்வழிக் கல்வியை 23 சதவீத இந்திய ஆசிரியர்கள் மட்டுமே நடைமுறைப் படுத்துகிறார்கள்.

அப்படியானால்,  இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் தேசியப் பாடத்திட்ட வடிவமைப்பும் (என்.சி.எஃப். 2005) தேசியக் கல்விக் கொள்கையும் பரிந்துரைத்த மாணவர்களை மையப்படுத்திய செயல்வழிக் கல்வி முறையை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தும் நாள் இன்னும் தொலைதூரத்திலேயேதான் உள்ளது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தேர்வு முடிவுகளில் மட்டுமே இன்னமும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். தவிர உள்ளீட்டுச் செயல்முறையில் (Input Process) இன்னும் தீவிரம் காட்டவில்லை என்பது உறுதியாகிறது.

கற்றலைக் கையகப்படுத்துவோம்!

கல்வி கொடுக்கப்படும் விதத்தில் தரத்தை உறுதிசெய்யாமல் மாணவர்கள் வெளிக்காட்ட வேண்டிய திறனில் மட்டும் தரத்தை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? ஆகையால் நம்முடைய ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் கற்பிக்கும் முறையை மேம்படுத்துதலே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். அதைவிடுத்து அப்பாவிக் குழந்தைகளைத் தண்டிப் பது என்பது இடைநிற்றலை அதிகரிக்கும்.  இதனால் அடிப்படைப் பள்ளிக் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் குறிக்கோள் குலைந்துபோகும்.

இதற்குத் தீர்வு ஆக்கப்பூர்வமான வகுப்பறைகளை அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்குதல். ஆக்கப்பூர்வமான வகுப்பறை என்பது என்ன? வகுப்பில் ஆசிரியர் சொற்பொழிவாற்றுவதற்குப் பதிலாக,

1. மாணவர்களும் ஆசிரியரும் உரையாடலில் ஈடுபடுதல்.

2. ஒருங்கிணைந்து கற்றல்: குழுவாக இணைந்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்துதல் அல்லது ஒரு பொருளை வடிவமைத்தல். இதன் மூலம் அது தொடர்பானவற்றைக் கற்றல்.

3. குழு விவாதம்.

4. அசைன்மெண்ட், புராஜெக்ட் களைச் செய்தல்.

இந்த அணுகுமுறையின் கீழ் மாணவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகளாக  நடத்தப்படுவதில்லை. கற்றறியும் திறன் குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ளது, சோதனைகள் மூலமாக அறிவை அவர்கள் வளர்த்துக்கொள்கிறார்கள் உள்ளிட்ட கோணங்கள் இங்கே கவனம்பெறுகின்றன.  குறிப்பாக, ஆசிரியர் எதைக் கற்பிக்கிறார் என்பதைவிடவும் மாணவர் எதைக் கற்றுக்கொள்கிறார் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதுவும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வெவ்வேறு சூழல்களில், பலதரப்பட்ட மக்களோடு தொடர்புகொண்டு கைகோத்துச் செயல்படும் பண்பை ஊக்குவிக்கும் கற்பிக்கும் கலைதான் தேவைப்படுகிறது.  ஆக, இனி ஆசிரியரின் கடமைகளின் முதன்மையானது தற்சார்போடு சிக்கல்களைக் கையாண்டு தீர்வு காணும் ஆற்றலை மாணவர்களுக்கு ஊட்டுவதாகும். மாணவர்களும் கற்பித்தலில் பங்காற்ற வேண்டும். ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்தால்போதும் என்று மந்தமாக இருந்துவிட முடியாது.  ஆசிரியரோடு இடைவிடாது உரையாடுவதன் வழியாக அவர்கள் கற்றலைக் கையகப்படுத்த வேண்டும்.

இவை அனைத்தும் சாத்தியமாக அவசரப்பட்டுக் கல்வி உரிமைச் சட்டத்தில் கைவைத்துவிடக் கூடாது. ஏனென்றால், 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்வாய்ந்த மாணவர் களை உருவாக்க நம்முடைய ஆசிரியர்களும் கல்வித் துறையும் ஆயத்தமாக வேண்டுமே தவிர மாணவர்களைத் தண்டிப்பதில் பயனில்லை.

- மனுலால், சி.பி.எஸ்.சி.யின் பாடத்திட்டக் குழுவில் தலைமைப் பதவி வகித்தவர்,
தொடர்புக்கு: drmanulalg@gmail.com | தமிழில்: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x