Published : 22 Jan 2019 11:20 AM
Last Updated : 22 Jan 2019 11:20 AM
நவீனத் தொழில்நுட்பம் கற்றலையும் கற்பித்தலையும் எளிதாக்கியிருக்கிறது. இருந்தும், திறன் பற்றாக்குறை தேசத்தின் அச்சாணியை முறிக்கும் விதமாக வளர்ந்து நிற்கிறது. “ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடிக்கும் மேலான பட்டதாரிகள் வேலைச் சந்தைக்குள் நுழைகிறார்கள். அவர்களில் 35 முதல் 75 சதவீதத்தினர்வரை வேலைக்குத் தயாராகாதவர்களாகவும் தொழில் திறனற்றவர்களாகவும் இருக்கிறார்கள்” என நாஸ்காம் நிறுவனத்தின் ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ்’ பிரிவின் தலைவரான கீர்த்தி சேத் கூறுகிறார். 18 ஆண்டு படிப்பு வேலைக்கு உரிய திறனைத் தருவதாக இல்லை என்பது பள்ளி, கல்லூரி படிப்பின் பயனைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
எங்கே பிரச்சினை?
கல்வி உளவியலாளரான டாக்டர் பெஞ்சமின் புளூம் 1956-ல் உருவாக்கிய ‘புளூம் டாக்ஸானமி’ எனும் வகைப்பாட்டின்படி, கற்றல் என்பது தகவல்களை மனத்தில் இருத்துவது மட்டுமல்ல; அது கருத்துகளையும் செயல்முறைகளையும் பகுப்பாய்வுசெய்து மதிப்பிட்டு நடைமுறைப்படுத்துவது. பொதுவாக, நமது கல்விமுறையின் எல்லை கற்றலோடு சுருங்கிவிடுகிறது. திறன்களும் அணுகுமுறையும் கல்வியின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. இதுவே இன்றைய பிரச்சினையின் ஆணிவேர்.
களைவது எப்படி?
கல்வி என்பது மாணவருக்கும் கல்வி நிறுவனத்துக்கும் இடையே மட்டும் நிகழும் அறிவுப் பரிவர்த்தனை அல்ல; அது மாணவருக்கும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனை. “பாடத்திட்டத்தை மேம்படுத்துவது மட்டும் தீர்வல்ல. வகுப்பைத் தாண்டி கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும். கல்வியை அறிவுசார்ந்ததாக மட்டுமல்லாமல், திறன் சார்ந்ததாக அணுக வேண்டும்” என்கிறார், கல்வியாளர் முனைவர் செந்தில்.
வேலையற்ற பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், அரசாங்கம் என அனைவரும் திறன்மேன்மையை நோக்கிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் மட்டுமே நாட்டில் நிலவும் திறன் பற்றாக்குறையைக் களைய முடியும்.
பட்டதாரிகள்
வேலையில் இருப்பவர்கள் வேலையில் சேர முயல்பவர்கள் எனப் பட்டதாரிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் கற்றலின்றித் தேங்கிவிடக் கூடாது. தங்களது நிறுவனத்தின் போக்கு குறித்து அவர்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். “எல்லா நிறுவனங்களிலும் திறன் பயிற்சி மையங்கள் உள்ளன. வேலையில் இருப்பவர்கள் முடிந்தவரை அவற்றில் இணைந்து தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரைவில் அவர்கள் அந்த நிறுவனத்துக்குப் பயனற்றவர்களாக மாறிவிடும் அபாயம் ஏற்படும்” என்கிறார், திறன் மேம்பாட்டு மேலாளராகப் பணியாற்றும் முனைவர் சாந்தி.
வேலை தேடுபவர்கள், தங்கள் படிப்புக்கும் தங்களது இயல்புக்கும் ஏற்ற துறையை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். பின்பு அந்தத் துறைகளில் இயங்கும் நிறுவனங்களையும் அந்த நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் அந்த வேலைவாய்ப்புக்குத் தேவைப்படும் திறன்களையும் கண்டறிய வேண்டும். பின்பு அந்தத் திறன்களை இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று, தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைக்கான நேர்காணலில் இந்த வழிமுறை அவர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையையும் துணிச்சலையும் அளிக்கும்.
மாணவர்கள்
படிப்பது கற்றலின் சிறு அங்கம். கற்றதை நடைமுறையில் செயல்படுத்தினால் மட்டுமே கற்றல் முழுமையடையும். "பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படும் அடிப்படைக் கல்வியைத் தாண்டி, தாங்கள் படிக்கும் துறைக்கு ஏற்ற நடைமுறைக் கல்வியையும் அதற்கான திறன்களையும் கண்டறிந்து அதை மேம்படுத்திக்கொள்வது மாணவர்களின் வெற்றிக்கு அவசியம்" என்கிறார் ஆசிரியர் திருவாழி.
கல்வி நிறுவனங்கள்
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி வாழ்வை மட்டுமல்ல; உலகின் அனைத்து அம்சங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. “பணிகளின் இயல்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் திறன் இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. புதுவகையான கல்வியே இன்றைய காலத்தின் தேவை.
கல்வி நிறுவனங்கள் தங்களையும் தங்களது பாடத் திட்டத்தையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்” என்று கீர்த்தி சேத் அறிவுறுத்துகிறார். மேலும், இன்றைய தேவைக்கும் வருங்காலத் தேவைக்கும் ஏற்ற படிப்புகளை நாஸ்காம் இனம்கண்டு, தனது ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ்’ இணையதளம் மூலமாகக் கல்வி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.
அரசாங்கம்
“திறன் பற்றாக்குறை தேசிய அளவிலான பிரச்சினை. அரசின் உதவியின்றி, இதைத் தனி நபராலோ அமைப்பாலோ நிவர்த்தி செய்ய முடியாது. அரசும் இந்தப் பிரச்சினையை உணர்ந்துள்ளது. நாஸ்காமின் ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ்’ அரசின் உதவியால் உருவானதுதான். ஆனால், இது மட்டும் போதாது. நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்களின் தரத்தை மாற்றவும் அது முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். “திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் சீனாவும் அமெரிக்காவும் வெகுவாக முன்னேறிவிட்டன. அரசு மனது வைத்தால் இந்தியாவும் முன்னேறிவிடும்” என்கிறார் கீர்த்தி சேத்.
வருங்காலத்தை வளமாக்குவோம்.
நேற்று இருந்த வேலைகள் இன்று இல்லை. அவற்றில் பல வழக்கொழிந்துவிட்டன. 2020-ல் எட்டுக் கோடிக்கும் மேலான வேலைகளை ஆட்டோமேஷன் ஆக்கிரமிக்கும் என்று உலக வர்த்தக மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அச்சம்கொள்ள வேண்டாம். 2020-ல் 13 கோடிக்கும் மேலான புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என அதே ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நமது மாணவர்களின் அறிவுக்குப் பஞ்சமில்லை. அதனால், அரசும் கல்வி நிறுவனங்களும் பெற்றோரும் கைகோத்தால் மாணவர்களின் வாழ்வு மட்டுமல்ல; தேசத்தின் வாழ்வும் வளமானதாக மாறும்.
தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT