Published : 25 Dec 2018 10:33 AM
Last Updated : 25 Dec 2018 10:33 AM
ஒன்பதாம் வகுப்பில் பாடப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு குரல், “டெஸ்க்ல எச்சியைத் துப்புறாங்கையா...” என்று சத்தமாய் எழுந்தது. லேசாய் முகம் சுளித்து நிமிர்ந்தேன். ”இல்லங்கையா சும்மா சொல்றாங்கையா!” என்று மெதுவாய்ச் சொல்லி எழுந்தவனின் முகம் பயத்தால் நிரம்பி இருந்தது.
“இவன்தான் துப்பினான் நான் பாத்தேங்கையா” என்று சில குரல்கள் நின்றவனைச் சுற்றிலும் எழுந்தன. ‘என்ன பழக்கம் இது’ என்று என் குரல் கடுமையானது. மெதுவாய் எழுந்தவனின் கண்களில் தெரிந்த பயமும் சுற்றி இருந்தவர்களின் கண்களில் தெரிந்த மெல்லிய கேலியும் என் மனத்துள் சுருக்கெனத் தைத்தது. அடடா இதில் வேறு செய்தி இருக்கிறது என்று தோன்றியது.
‘பயமா இருக்கு’
“எல்லோரும் புத்தகத்தைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு வாசிக்கத் தொடங்கினேன்.
செய்யுளை வாசிக்கும்போதும் அவ்வப்போது நேரடியாக அவனைப் பார்க்காமல் சுற்றிலும் பார்த்தபடி இருந்தேன். தலையில் தட்டிவிட்டுத் தெரியாததுபோல இருப்பது, பெஞ்சுக்குக் கீழே காலால் எத்துவது போன்ற செயல்களை அவனைச் சுற்றி இருந்தவர்கள் செய்துகொண்டே இருந்தனர்.
இடைவேளை நேரத்தில் அவனைத் தனியே அழைத்தேன்.
தயங்கியபடியே அருகே வந்தவனின் கண்களில் பயம் உறைந்திருந்தது.
“உன்னை அடிக்கிறாங்களா?”
மெதுவாய் அசைந்தது அவனின் தலை. கண்களில் திரண்டது நீர்.
“அவனுக எதாவது செய்தால் உடனே வகுப்பில் இருக்கும் ஆசிரியர் கிட்டே சொல்ல வேண்டியதுதானே” என்றேன். “அவங்க முந்தி எதாவது சொல்லிடுறாங்க. எனக்குப் பயமா இருக்கு” துண்டு துண்டாய் மெல்லிய வார்த்தைகளில் சொன்னான்.
“அவர்களைப் பார்க்கும் பார்வையில் பயத்தை வைக்காமல் தைரியமாகப் பார். நீங்கள் நண்பர்கள் என்பதால் சும்மா இருந்தேன். நீங்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ‘இனிமேல் என்னுடன் இப்படி விளையாடாதீர்கள்’ என்று சொல். அதற்குப் பிறகும் உன்னை அடித்து விளையாடினால் என்னிடம் வந்து சொல்” என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அவனுடன் பேசினேன்.
எல்லை மீறும் சீண்டல்
சிறு கேலி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தொடர் கொடுமைப்படுத்தலாக மாறிவிடுகிறது. பெரியவர்களிடம் சொன்னால் அவர்களின் கொடுமைகள் அதிகரிக்கும் என்ற பயத்தில் மனத்தளவில் நிறையக் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
நேரடியாக இதெல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுரைகள் சொன்னால் சரி என்று கேட்டுக்கொள்வார்கள். ஆனாலும் கேலி, கிண்டல், சீண்டல் தொடரும். விளையாட்டாகச் செய்வது வினையாக முடியலாம் என்பது குறித்து மாணவர்களுக்குச் சொல்ல ஏற்ற படத்தைத் தேடினேன்.
ஆங்கிலத்தில் ‘புல்லியிங்’ (bullying) என்று சொல்லப்படும் இக்கொடுமை பற்றி ஏராளமான படங்கள் உலகெங்கிலும் எடுக்கப்படுகின்றன. குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கும் இக்கொடுமை பற்றித் தமிழில் விரல் விட்டு எண்ணுமளவுகூடப் படங்கள் இல்லை.
போலந்து நாட்டில் எடுக்கப்பட்ட In a Heartbeat என்ற வசனங்கள் இல்லாத குறும்படத்தைத் திரையிட்டேன்.
பயந்த சுபாவமுள்ள சிறுமி. வகுப்பிலும் வெளியிலும் சக மாணவ மாணவியரின் கேலி, கிண்டல்களால் தனியாக இருக்கிறாள். ஒரு மாணவன் பெரிய பையன்களால் துன்புறுத்தப்படும்போது அவளுக்குள் தைரியம் பிறக்கிறது. அடிப்பதைத் தடுக்கிறாள்.
படம் முடிந்ததும், “பள்ளியில் என்று இல்லை. வீட்டிலும் வெளியிலும் எப்படில்லாம் இதுமாதிரியான செயல்கள் நடக்குது?” என்று கேட்டேன்.
“பட்டப்பேர் சொல்லிக் கிண்டல் பண்றாங்கையா!” என்று ஒரு குரல் எழுந்தது. உடனே “இவனோட பட்டப்பெயர் இது” என்று ஒருவன் சொன்னான். ஆங்காங்கே பட்டப்பெயர்கள் சொல்லப்பட்டன. வழக்கம்போலவே ஊர், நிறம், உயரம், உடற்குறைபாடுகள், ஓரிரு வித்தியாசமான பெயர்கள் என்று பட்டப்பெயர்களைச் சொன்னார்கள்.
அடக்குமுறையின் ஆணிவேர்
“ஒருவரின் குறைபாடுகளைப் பட்டப்பெயராக்கிக் கூப்பிடுவது மனிதத் தன்மை அல்ல. வேறு ஏதேனும் சொல்ல விரும்புபவர்கள் சொல்லலாம்” என்றேன்.
“சார், அவனை எல்லோரும் அடிச்சுக்கிட்டே இருப்பாங்க. விளையாட்டுக்குத்தான்னு சொல்லுவாங்க. ஆனா நெறைய கிண்டல் பண்ணுவாங்க. எப்படியும் ஒருநாளுக்கு ஒருவாட்டியாவது அழுதுருவான்” என்று சொல்லியபடியே ஒரு மாணவர் சுட்டிக்காட்டியது ஏற்கெனவே நான் அறிந்த மாணவனை அல்ல.
“சார், மதியம் சாப்பிடும்போது இவங்க வந்து என்னை அடிச்சிட்டு அடிச்சிட்டு ஓடுறாங்க!” என்று சொன்ன அவன் சிலரைக் கைகாட்டினான். அவர்கள், “இல்லைங்கையா” என்று கத்தினர்.
“இது குறித்து நிறையப் பேசுவோம். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்றேன், சக மனிதனைத் துன்பப்படுத்தி ரசிப்பது மனிதத் தன்மையே இல்லாத செயல் என்று நான் நம்புகிறேன்” என்றேன். வகுப்பறை அமைதியானது.
எளியவர்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் இந்த மனநிலைதானே அடக்குமுறையின் ஆணிவேர். ‘செல்லிடத்துச் சினம் காக்க!’ என்று வள்ளுவன் சொன்னதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்க வேண்டாமா?
வகுப்பறையில் பார்த்த மாணவனின் பயம், உறைந்துபோன அந்த விழிகள் நீண்ட நாட்களாக என மனதுள் இருந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாணவரும் எளிதிலும் நம்பிக்கையோடும் அணுக முடிகிற ஆசிரியராக இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் யோசிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.
‘In a Heartbeat’
- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT