Published : 11 Dec 2018 11:05 AM
Last Updated : 11 Dec 2018 11:05 AM
இந்திய அளவில் 2018-ம் ஆண்டு எதிர்பாராத சம்பவங்களின் அணிவகுப்பாகவே இருந்தது. தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வை:
புதிய தலைவர்கள்
> மத்தியப் பிரதேசத்தின் புதிய ஆளுநராக ஜனவரி 19 அன்று ஆனந்திபென் பட்டேல் அறிவிக்கப்பட்டார்.
> மேகாலயா மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா மார்ச் 6 அன்று பதவியேற்றார்.
> நாகாலாந்தின் புதிய முதல்வராகத் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெபியு ரியோ மார்ச் 8 அன்று பதவியேற்றார்.
> திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராகப் பாஜகவின் விப்லப் குமார் தேவ் மார்ச் 9 அன்று பதவியேற்றார்.
> மத்தியத் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மே 14 அன்று பொறுப்பேற்றார்.
> கர்நாடகாவின் 29-வது முதல்வராக எடியூரப்பா மே 17 அன்று பதவியேற்றார். ஆனால், அவர் பதவியேற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால் மே 19 அன்று ராஜினாமா செய்தார். மே 23 அன்று காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம், சுயேட்ச்சை கூட்டணியின் 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கர்நாடகாவின் 30-வது முதல்வராக எச்.டி. குமாரசாமி பதவியேற்றார்.
விருதுகளின் அணிவகுப்பு
‘பத்ம விருதுகள் 2018’ டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மார்ச் 21 அன்று 85 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா உட்பட 3 பேர் பத்ம விபூஷண் விருதும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் நாகசாமி உட்பட 9 பேர் பத்ம பூஷண் விருதும் தமிழக நாட்டுப்புறப் பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதும் பெற்றனர்.
நீதி கோரிய நீதிபதிகள்
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டாலும் அவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு அவர் ஒதுக்கிவிடுகிறார். இதனால், உச்ச நீதிமன்றத்தின் மாண்பு குறைந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகள் டெல்லியில் செய்தியாளர்களிடம் ஜனவரி 12 அன்று புகார் அளித்தனர்.
இந்திய வரலாற்றில் பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தது இதுவே முதன்முறை. ‘திரையரங்குகளில் தேசிய கீதம் பாட வேண்டும்’, ‘யாகூப் மேமனுக்குத் தூக்கு தண்டனை’, ‘பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுக்குத் தடை’ உள்ளிட்ட பிரபலத் தீர்ப்புகளில் நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்கு கவனத்துக்குரியது.
அதிரவைத்த தீர்ப்புகள்
> காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தைக் கையாள மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பிப்ரவரி 16 அன்று உத்தரவிட்டது. இதை அடுத்து அதற்கான வரைவில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை வைத்துச் சர்ச்சையைக் கிளப்பியது மத்திய அரசு. ஒருவழியாக ஜூலை 2 அன்று முதல் சந்திப்பில் தமிழ்நாட்டுக்கு 34 டி.எம்.சி. நீரைத் திறக்கச் சொல்லிக் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது காவிரி மேலாண்மை ஆணையம்.
> கேரளத்தைச் சேர்ந்த ஹாதியா-ஷஃபின் ஜஹான் திருமணத்தை ரத்து செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் மதத்தையும் திருமணத்தையும் தேர்ந்தெடுப்பது தனிமனித உரிமை என்று ஏப்ரல் 9 அன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
> நான்காவது தீவன மோசடி வழக்கில், ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என்று மார்ச் 19 அன்று தீர்ப்பளித்தது.
> அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடிய வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் ஏப்ரல் 5 அன்று தீர்ப்பளித்தது. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
> தன்பாலின உறவைக் குற்றமாக அறிவிக்கும் இந்தியச் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு செப்டம்பர் 6 அன்று தீர்ப்பளித்தது.
> திருமணத்துக்கு வெளியிலான உறவு குற்றமில்லை என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 497-யை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து செப்டம்பர் 27 அன்று நீக்கியது.
> சபரிமலைக்கு அனைத்து வயதைச் சேர்ந்த பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28 அன்று தீர்ப்பு வழங்கியது.
> தேனியில் அமல்படுத்தவிருந்த மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்குத் தேசியப் பசுமை தீர்ப்பாயம் நவம்பர் 2 அன்று தடைவிதித்தது.
ரஃபேல் ஒப்பந்த சர்ச்சை
மத்திய அரசுக்கு எதிராக ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. குறிப்பாக, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். உச்சகட்டமாக ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆதாரம் இருப்பதாக நவ. 2 அன்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
சமூக செயற்பாட்டார்களுக்குக் குறி
மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரைரா, வெர்னோன் கொன்ஸால்வஸ், கவிஞரும் மாவோயிசச் சிந்தனையாளருமான வரவர ராவ் ஆகியோர் புனே காவல்துறையால் ஆகஸ்ட் 28 அன்று கைதுசெய்யப்பட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைபெற்ற பீமா-கோரேகான் வன்முறை வழக்குத் தொடர்பாக இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
மூழ்கடித்த மழை
கேரளாவில் ஆகஸ்ட் 8 –லிருந்து தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்தது. இதனால் 40 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டன. முப்படைகளின் உதவியுடன் கேரளத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மழை வெள்ளத்தில் மொத்தமாக 372 பேர் உயிரிழந்தனர். 26,000 வீடுகள் பாதிக்கப்பட்டன.
40,000 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாழாயின. 2 லட்சம் கால்நடைகள் உயிரிழந்தன. கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ. 600 கோடியை வெள்ள நிவாரண நிதியாக ஆகஸ்ட் 21 அன்று அறிவித்தது. ஐக்கிய அரேபிய அமீரகம் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 700 கோடி வழங்குவதற்கு முன்வந்ததும், அதைப் பெற அனுமதி மறுக்கப்பட்டதும் சர்ச்சையானது.
ஒத்திப்போடப்படும் நீதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூன் 15 அன்று நிராகரித்தார். இதேபோல முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஆக. 10 அன்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பான வழக்கில், 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாகத் தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் செப். 6 அன்று தீர்ப்பளித்தது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் அடங்கி அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
பத்திரிகையாளர் கொலை
ஸ்ரீநகரில் ‘ரைஸிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஜூன் 14 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். லால் சவுக்கில் நடக்கவிருந்த இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT