Published : 11 Dec 2018 11:09 AM
Last Updated : 11 Dec 2018 11:09 AM
‘அமெரிக்கரைக் கொன்ற பழங்குடிகள்!’ – இதுதான் கடந்த வார ‘டிரெண்ட்’.
இப்படித்தான் ஊடகங்கள் பலவும் ஊளை யிட்டன. எல்லாச் செய்திகளும், ஏதோ ஓர் அப்பாவி அமெரிக்கரை, அந்தமான் தீவில் உள்ள சென்டினலீஸ் பழங்குடிகள் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார்கள் என்கிற ரீதியிலேயே தங்களின் புலனாய்வை வழங்கின.
மிகவும் குறைந்த எண்ணிக்கையில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஜராவா, சென்டினலீஸ் போன்று பல ஆதிவாசி இனக் குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.வெளி உலகத்துடனான தொடர்பை வெறுத்துத்தான் அவர்கள் காடுகளுக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள்.
மனிதராக்குகிறேன், புனிதராக்குகிறேன்!
‘அவர்களை மைய நீரோட்டத்துக்குக் கொண்டுவருகிறோம்’ என்று சொல்லி அரசு, பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து அத்தகைய முயற்சிகளைச் சிலர் தொடர்ந்து வருகின்றனர். அப்படியான ஒருவர்தான், சமீபத்தில் சென்டினலீஸ் இனக் குழுவினரால் மரணமடைந்த ஜான் ஆலென் சவ்.
அவர்களின் வாழ்க்கை முறை, சமூகத் தொடர்புகள் போன்ற எதைப் பற்றிய அடிப்படையான அறிவும் இல்லாமல், ‘அவர்களை மனிதராக்குகிறேன், புனிதராக்குகிறேன்’ என்று சொல்லி அங்கு போய் மாட்டிக்கொண்டார். தாங்கள் உண்டு, தங்கள் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் ஆதிவாசிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களுக்குக் கோபம் வருமா, வராதா..?
இங்கு இந்தக் கோபம் என்பதை, அவர்கள் பின்பற்றும் ஒரு பாதுகாப்பு அம்சமாகவே நாம் கருத வேண்டும். முன் பின் அறிமுகமில்லாத நபர், நம் படுக்கையறைக்குள் நுழைந்தால் நாம் அச்சப்படத்தானே செய்வோம்? வெளியே விரட்டத்தானே முயல்வோம்?
இதற்கிடையில், இவர்களை ‘ட்ரைபல்ஸ்’ (பழங்குடிகள்) என்ற சொல்லால் அழைப்பதே தவறு என்ற விவாதமும் கிளம்பியிருக்கிறது. அது அவர்களை இழிவுபடுத்தும் சொல் என்றும், இந்திய அரசியலமைப்பில் அவர்கள் ‘பர்ட்டிகுலர்லி வல்நரபிள் ட்ரைபல் குரூப்’ (தனிமைப்பட்ட பாதிக்கப்படக்கூடிய பழங்குடி இனக்குழுக்கள்) என்று குறிப்பிட்டிருப்பதால், அப்படியே அவர்களை அழைக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
நிற்க, இந்த வாரம், அப்படியான ஒரு பழங்குடி இனக்குழுவிலிருந்து பிறந்த சொற்றொடரைக் காணலாமா..?
‘Bury the hatchet’ (பரி தி ஹாஷெட்) என்றொரு சொற்றொடர் ஆங்கிலத்தில் உண்டு. அதாவது, ஒருவருடனான பகைமையை மறந்து, சமாதானமாகப் போவது என்று பொருள். இந்தச் சொற்றொடர் அமெரிக்காவின் பழங்குடியினரான செவ்விந்தியர்கள் பின்பற்றிய ஒரு பழக்கத்திலிருந்து பிறந்தது.
‘ஹாஷெட்’ என்பது கோடரி, அரிவாள் போன்ற ஒரு கருவி. இரண்டு பழங்குடி இனக் குழுக்கள், தங்களிடையே நிலவிவரும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தால், அவர்கள் அந்தக் கருவியை மண்ணில் புதைத்துவிட்டுச் சமாதானம் செய்துகொள்வார்களாம்.
சரி… சென்டினலீஸ் போன்ற ஆதிவாசிகளுக்கு நம் மீதான ‘பகைமை’யை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது..? ‘நமக்குக் கல்வி அறிவு உண்டு’ என்ற அகந்தையை மண்ணில் புதைத்துவிட்டு, நாம் நம் வேலையைப் பார்ப்போம். அவர்களது வாழ்க்கையை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT