Published : 25 Sep 2018 11:34 AM
Last Updated : 25 Sep 2018 11:34 AM

கரும்பலகைக்கு அப்பால்... 02 - நான், எங்க அப்பா பேசுறேன்!

வகுப்பறை. ஒரு சிறுவன் கரும்பலகையில் ஏதோ எழுதிக்கொண்டிருக் கிறான். திரும்பிப் பார்த்துக் கேட்கிறான்,

“எல்லாரும் காப்பி பண்ணியாச்சா?”

“எஸ்...சார்!”

“ரோஷினி ஸ்டாண்ட் அப்” என்று அவனது குரல் அதிகாரமாக ஒலிக்கிறது.

பயந்தபடியே எழுந்து நின்றவர், பெரிய பெண். சிறுவன் ஆசிரியராக இருக்கிறான். அவனது கேள்விக்குப் பதில் தெரியாது என்று அந்தப் பெண் தயங்கியபடியே சொல்லுகிறார்.

ஆசிரியராக மாணவன்

‘இப்பதானே டீச் பண்னேன். இங்கே வா!’ சிறுவன் கோபமாக அழைக்கிறான். அருகே வந்த பெண்ணிடம் கையைக் காட்டு என்று அதட்டுகிறான். நீட்டிய  கையில் பிரம்பால் ஒரு அடி. “ஆ!” என்று அந்தப் பெண் கத்துகிறார்.

அலாரம் ஒலிக்கிறது. கனவிலிருந்து விழிக்கிறான் ஆசிரியராக இருந்த சிறுவன்.

ஐயோ...வீட்டுப்பாடம் எழுத மறந்துட்டேனே!

தொலைபேசியில் தன் ஆசிரியையிடம் பேசுகிறான். “ஹலோ, இன்னைக்கு அஜய் ஸ்கூலுக்கு வர மாட்டான் அவனுக்கு ஒடம்பு சரியில்லை” என்று குரலை மாற்றிப் பேசுகிறான்.

“நீங்க யார் பேசுறீங்க?” என்ற ஆசிரியையின் கேள்விக்கு “நான், எங்க அப்பா பேசுறேன்!” என்று பதிலை அவசரத்தில் சொல்லிவிடுகிறான். ஐயோ, மாட்டிக்கிட்டேனே! என்று விழிக்கிறான். படம் இன்னும் வேகமெடுக்கிறது.

வீட்டுப்பாடம் குறித்த பயம், ஆசிரியர் தரும் தண்டனைகள், பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன் எத்தனை விதமான  ஏமாற்று வேலைகளைக் குழந்தைகள் செய்கிறார்கள்  போன்றவற்றை நகைச்சுவையாகச் சொல்லும் குறும்படம், ‘ஆசான்’.

உயர்ந்த கரங்கள்

இந்தப் படத்தைத் திரையிட்டபோது, ஆறாம் வகுப்பு மாணவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். படம் முடிந்ததும் உரையாடத் தொடங்கினேன்.

“இதே மாதிரி நானும் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகாமல் இருக்க வயித்துவலின்னு நடிச்சிருக்கேன். ஆமா! நீங்க இது மாதிரி என்னவெல்லாம் பண்ணிருக்கீங்க?”

கரங்கள் உயர்ந்தன.

“அப்பா வேலைக்குப் போனதும் அம்மாவிடம் தலை வலிக்குதுன்னு சொல்லிடுவேன்!”

“நான் வீட்டுப்பாடம் எழுதல. மிஸ் கேட்டப்போ என்ன சொல்றதுன்னு தெரியல. நேத்து சித்தி இறந்துட்டாங்கனு சொன்னேன். சரி உட்காருன்னு சொல்லிட்டாங்க. சாயங்காலம் எங்க அண்ணங்கிட்டே மிஸ் வருத்தமா கேட்டாங்க. ‘உங்க சித்தி இறந்துட்டாங்கலாமே! என்னாச்சு?’

அவன் பதறிப்போயிட்டான். ‘இல்லீங்க மிஸ். எங்க சித்தியும் சித்தப்பாவும் நேத்துதான் ஊரில் இருந்து வந்திருக்காங்க’னு உண்மையை உடைச்சுட்டான். எங்க அப்பா கிட்டேயும் மிஸ் சொல்லிட்டாங்க. வீட்டுல அப்பா செமையா காய்ச்சினாரு.”

எல்லோரும் சிரித்தனர். உரையாடல் தொடர்ந்தது. நிறைய செய்திகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

எத்தனை விதமாகக் குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பது ஆச்சரியம். அவற்றின் சிறப்பே அது பொய் என்று எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிற எளிமைதான்.

இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று உயர் நீதி மன்றம் எச்சரித்திருக்கிறது. பள்ளியும் வீடும் வீட்டுப்பாடம் வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கின்றன.

அவன் அப்படித்தான்!

ஏன் வீட்டுப்பாடம் வேண்டும்?

ஒரு பத்தியை 10 தடவை எழுதுவதால் என்ன பயன்?

வகுப்பறையில் இருக்கும் எல்லா மாணவர்களும் திருவள்ளுவர் படத்தை ஒட்டி வருவதால் என்ன பயன்?

பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பவர் எத்தனை அழகாக அதை வெட்டிவைத்திருக்கிறார். வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப உப்பும் மிளகாய்த்தூளும் தூவித்தருகிறார். அப்படிப் படைப்பாற்றலோடு கல்வி பரிமாறப்படுகிறதா? எல்லாவற்றையும்  நாம் சடங்குகளாக அல்லவா மாற்றி வைத்திருக்கிறோம்.

அதிகக் கட்டணமும் அதிக வீட்டுப்பாடமும் தரும் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம்.

குழந்தைகள் விழித்திருக்கும் நேரத்தையெல்லாம் கல்வி விழுங்கிவிட்டால் விளையாடுவது எப்போது? கூடி விளையாடாதே பாப்பா! என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறோம். நமது பேராசை விளையாட்டின் பொம்மைகளாகக் குழந்தைகளை ஆக்கிவிட்டோம். கூடி விளையாடும் போதுதானே  சமூகத்தோடு இணைந்து வாழும் பழக்கம் ஏற்படும்.

ஒரு வகையில் பள்ளியும் வீடும் சிறைச்சாலைகள். அங்கே குழந்தையைத் தனியாக, சுயநலமாக வளர்ப்பதே நமது முக்கியப் பணி என்ற தீர்மானத்தோடும் இருக்கிறோம்.

பேருந்து நிறுத்தம் வரை பெற்றோர். பள்ளிவரை பேருந்து. பள்ளிக்குள் அமைதி. பல்வேறு சட்டங்கள் என்று குழந்தைகளை இயந்திரமாக ஆக்கிவைக்கிறோம். அதன்பின், சமூகம் கெட்டுவிட்டது, முதியோர் இல்லங்கள் அதிகரித்துவிட்டன என்று புலம்புவதால் என்ன பயன்?

“இதைக்கூடவா செய்ய முடியவில்லை?” என்ற கேள்வி, “இதை ஏன் செய்ய முடியவில்லை!” என்று எப்போது மாறும்?

குழந்தைகள் வெள்ளந்தியானவர்கள். அவர்கள் திட்டமிட்டுத் தவறுகளைச் செய்வதில்லை. நமது தண்டனைகள், வசவுகள் மீதான  பயமே அவர்களைத் தவறுகள் செய்ய வைக்கிறது. அவற்றை மீண்டும் மீண்டும்  சொல்லிக்காட்டுகிறோம். ‘அவன் அப்படித்தான்!’ என்று முத்திரையிடுகிறோம். அவர்களின் தவறுகள் தொடரவும் பெரியதாக ஆகவும் நாமே காரணமாகிறோம்.

‘ஆசான்’ (07.09 நிமிடங்கள்)

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x