Published : 27 Nov 2018 10:13 AM
Last Updated : 27 Nov 2018 10:13 AM
கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம், நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்… எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது.
இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால் ‘நீட்’ மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை. சுகாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அபாயகரமான நிலைக்குள் அமிழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றைப் பல கோணங்களில் அலசி ஆராய்கிறது, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘மறுக்கப்படும் மருத்துவம்’ நூல்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை பொதுச் செயலாளராக இருந்த காலம்தொட்டு தொடர்ந்து மருத்துவ உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற்குணம், மாணவர் உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் S. காசி, டெல்லி எய்ம்ஸில் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் போராடிவரும் மருத்துவர் G.K. கலைச்செல்வம் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இருக்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு.
ஏன் கலைக்க வேண்டும்?
இந்தியா முழுவதும் சீரான மருத்துவ வசதிகளை உருவாக்கத் தவறிவிட்ட காரணத்தாலும், ஊழல் மலிந்த துறையாக மருத்துவத் துறை மாறக் காரணமாகிவிட்டதாலும் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டுத் தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்கான மசோதா (NMC Bill, 2017) நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் 2014 ஜூலையிலேயே தொடங்கிவிட்டன. இது தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றுதான் அனைவருக்குமான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’.
இதன் விளைவாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, பட்டப்படிப்பு மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்துப் பராமரிப்பது, மேற்படிப்பு மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவது, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அனுமதியை வழங்குவது உள்படப் பலவற்றைச் செய்துவந்த இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாகத்தான் தேசிய மருத்துவ ஆணையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும், ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்தப் பரிந்துரைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் மருத்துவக் கல்வி கற்க எத்தனிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவு எட்டாக் கனியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்கிறது ‘மறுக்கப்படும் மருத்துவம்’ புத்தகம்.
வசூல் ராஜாவாகும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்
‘மருத்துவத்தைச் சந்தையாக்கும் மசோதா’ என்ற கட்டுரையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் மருத்துவ ஆணையத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில புள்ளிகள் இந்திய மருத்துவக் கல்வி எதிர்கொள்ளவிருக்கும் அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மருத்துவத் துறைக்குள் நிகழும் விவகாரங்கள் மாணவர்களுக்கு எதற்கு என்று கடந்துபோக முடியாதபடி அவை அச்சுறுத்துகின்றன.
இந்திய மருத்துவ கவுன்சில்தான் முறைப்படி ஆய்வு நடத்தி, பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான அங்கீகாரத்தைத் தரும். ஆனால், இதே விவகாரத்தில் அந்தந்தக் கல்லூரிகளே முதுநிலைப் படிப்புகளைத் தொடங்கி நடத்தலாம் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
இந்திய மருத்துவ கவுன்சிலின்படி கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் கவுன்சிலுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயம் செய்யும். ஏனைய 60 சதவீத மாணவர்களிடம் தன் விருப்பம்போல கல்லூரி நிர்வாகமே கட்டணம் வசூல் செய்யலாம்.
இந்தப் பின்னணியில்தான் நீட் தேர்வைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வழங்கிய நிலைமையை மாற்றி எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவது என்பது தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான திறவுகோல் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 119 அதாவது வெறும் 16.53 சதவீதம் மட்டுமே மதிப்பெண் பெற்றவர்கள் பணமிருந்தால் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால், 250 அல்லது 300 மதிப்பெண் வாங்கும் மாணவர் பணம் செலுத்த முடியாத பட்சத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க முடியாது.
அடுத்த பிரச்சினை ‘நெக்ஸ்ட்’
எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்கி ஒரு புறம் கதவை மூடியது மட்டுமல்லாமல் எம்.பி.பி.எஸ். முடித்துப் பதிவு செய்து மருத்துவப் பணி செய்ய வேண்டுமானால் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய வெளித்தேர்வையும் (National Exit Exam - NEXT) கட்டாயம் எழுத வேண்டும் என்று இந்த ஆணையம் அறிவித்திருப்பதுதான் அடுத்த அதிர்ச்சி. இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் இறுதியாண்டில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மகளிர் நோய் ஆகியவற்றைப் பிரதானமாகப் படிப்பார்கள். அதிலும் தற்போது நடைமுறையில் உள்ள இறுதியாண்டுத் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு, நோயாளிகளைப் பரிசோதிக்கும் திறன் உட்படச் செய்முறைத் தேர்வும் இணைந்த ஒன்றாகும்.
இத்தகைய விஷயங்களை Multiple Choice Questions என்ற அடிப்படையில் நடத்தப்படும் தேர்வில் மாணவரின் நோயறிதிறனை, நோய் தீர்க்கும் அறிவை முழுமையாகச் சோதிக்க இயலாது. அதேபோல, ‘காலா அஸார்’, இதயத்தின் தமனிகளில் அடைப்பு, ஜப்பானிய யானைக்கால் போன்ற நோய்கள் வட இந்தியாவில் பரவலாக உள்ளன.
இத்தகைய நோய்கள் தென் இந்தியாவில் குறைவு. இப்படி இருக்க மருத்துவக் கல்வியில் பொதுவான பாடத்திட்டம் என்பது உயிரைக் காக்கும் தொழிலான மருத்துவத்தை வெறும் ஏட்டுக் கல்வியாக மாற்றும் விபரீதமாகும் என்பது ‘தேசிய மருத்துவ கமிஷனும் அதன் விளைவுகளும்’ கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது
முரண்களின் மூட்டையா?
இதைவிடவும் சிக்கலானது, இந்திய முறை மருத்துவப் பட்டதாரிகள், ஹோமியோபதி பட்டதாரிகள் இணைப்புப் படிப்பாக (Bridge Course) ஆறு மாதம் அலோபதி மருத்துவத்தைப் படித்துவிட்டுக் கிராமப்புறச் சுகாதாரச் சேவைகளில் ஈடுபடலாம் என்கிறது இந்த ஆணைய மசோதா. ஒரு புறம் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பயிற்சி பெற்ற எம்.பி.பி.எஸ். மருத்துவரைத் தரப்படுத்துகிறோம் என்று கூறி மீண்டும் ‘நெக்ஸ்ட்’ எழுதச் சொல்கிறது. மறுபுறம் ஆறு வருடப் படிப்பை ஆறு மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம் என்கிறது. இப்படிப் பல முரண்களின் மூட்டையாக இந்த மசோதா காணப்படுவதை ‘மறுக்கப்படும் மருத்துவம்’ பக்கத்துக்குப் பக்கம் அலசுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் பெற்ற கல்விக்கு அப்பால் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதுபோலவே நான்கரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டுக் கடைசியில் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நெக்ஸ்ட்’ தேர்வை எழுத வேண்டிய சூழல் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் வழியாக நம்முடைய பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அத்தனையும் பயனற்றவை என்ற பொதுப்புத்தியைத்தான் இந்தத் திட்டம் ஏற்படுத்திவருகிறது. மறுபுறம் மீண்டும் மீண்டும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத, அதிகச் செலவு செய்து சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திராணி அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு முற்றிலுமாக மருத்துவக் கல்வி மறுக்கப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT