Published : 09 Oct 2018 11:39 AM
Last Updated : 09 Oct 2018 11:39 AM
உலகின் மதிப்புமிகுந்த விருது நோபல் பரிசு. இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் என ஆறு பிரிவுகளில் அந்த விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி ஆகிய பிரிவுகளில் விருது பெற்றவர்கள் யார்?:
இயற்பியல்
அக்டோபர் 2 அன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜெரால்ட் மொரூவ், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் ஆகியோர் கூட்டாக இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இயற்பியலில் சீரொளி இயற்பியல் (laser physics) என்றழைக்கப்படும் துறையில் ஆற்றிய பெரும் பணிக்காக இவர்களுக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், ஆர்தர் ஆஷ்கின் ஆப்டிகல் ட்வீசர்ஸ் (optical tweezers) என்ற கண்டுபிடிப்பைச் சாத்தியமாக்கியவர். அறிவியல் கற்பனையை உண்மையாக்கிய கண்டுபிடிப்பு என இது வர்ணிக்கப்படுகிறது.ஆர்தரின் கண்டுபிடிப்பு பழசு தற்போது அவருடைய வயது 96.
55 ஆண்டுகளில் முதன்முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசை ஒரு பெண் பெற்றது சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு விருது பெற்றிருப்பதால் இயற்பியல் துறையில் உள்ள பெண்களுக்கெல்லாம் டோனா ஸ்டிரிக்லாண்ட் முன்னுதாரணமாகியிருக்கிறார்.
மருத்துவம்
அக்டோபர் 1 அன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி. அலிசன், ஜப்பானைச் சேர்ந்த டசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் இந்த நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்கிறார்கள். புற்றுநோய் எதிர்ப்பு செல்களில் இருக்கும் தடைகளையும் அவற்றைக் களையும் வழிமுறையையும் கண்டுபிடித்ததன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இவர்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என நோபல் கமிட்டி வர்ணித்துள்ளது.
இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று மருத்துவ உலகம் கொண்டாடுகிறது. உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு அலிசன் - ஹோன்ஜோ உருவாக்கிய புதுமையான சிகிச்சை முறை வியக்கத்தக்க பலன்களைத் தரவல்லது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலிசன், கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் 1.01 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 7.5 கோடி ரூபாய்) மதிப்புள்ள இந்த நோபல் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
வேதியியல்
அக்டோபர் 3 அன்று வேதியியலுக்கான விருது அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் பி. ஸ்மித், இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்கின்றனர். என்சைம் (நொதி) தொடர்பான ஆய்வில் தங்களின் அரிய கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்கச் செய்யக்கூடிய புதிய நொதிகளை உருவாக்க ‘இயக்கப் பரிணாமம்’ என்ற தொழில்நுட்பத்தை இவர்கள் பயன்படுத்தினார்கள். அதற்காகவே விருது இவர்களை இப்போது அலங்கரித்திருக்கிறது. இந்த நொதிகள் புதிய மருந்துகள், பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுபவை.
பிரான்சஸ் அர்னால்டு இந்தப் பரிசில் பாதித் தொகையான 9,98,619 டாலரைப் பெற உள்ளார். மீதியை ஜார்ஜ் பி. ஸ்மித்தும், கிரகோரி வின்டரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள். ஸ்மித்தும் கிரகோரி வின்டரும் புதிய புரதங்களைப் பரிணமிக்கச் செய்ய பெஜ் காட்சி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிக்கச் செய்து புதிய ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு இதனை அவர்கள் பயன்படுத்தியதற்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களில் பிரான்சஸ் அர்னால்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெறும் 5-வது பெண்.
அமைதி
அக்டோபர் 5 அன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு மட்டும் தனிநபர், அமைப்புகள் என 331 பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.இதில் வல்லுறவை ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளராக அறியப்படும் நாடியா முராத், டெனிஸ் முக்வேகே ஆகியோர் இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். இருவருமே பாலியல் வல்லுறவு குற்றத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்.
ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வல்லுறவுக்கு உள்ளானவர் நடியா முராத். 2014-ல் ஐ.எஸ். பிடியிலிருந்து தப்பிய இவர், யாசிதி சமூக மக்களின் விடுதலைக்காகவும் போராடிவருகிறார். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த மகளிர் நல மருத்துவர். இவர் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சை அளித்துவருபவர்.
வல்லுறவால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு முக்வேகய் சிகிச்சை அளித்துள்ளார். போர்களில் நடத்தப்படும் வல்லுறவால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ஆர்தர் ஆஷ்கின்டோனா ஸ்டிரிக்லாண்ட்ஜெரால்ட் மொரூவ்ஜேம்ஸ் பி. அலிசன்டசுக்கு ஹோன்ஜோடெனிஸ் முக்வேகேநடியா முராத்பிரான்சஸ் அர்னால்டுஜார்ஜ் பி. ஸ்மித்கிரகோரி வின்டர்நோபல் பரிசு - 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT