Last Updated : 17 Jul, 2018 10:31 AM

 

Published : 17 Jul 2018 10:31 AM
Last Updated : 17 Jul 2018 10:31 AM

துறை அறிமுகம்: விளையாட்டை ‘சீரியசா’ படிங்க

ஸ்மார்ட்ஃபோன், கணினி எனச் சதா சர்வகாலமும் வீடியோ கேம் விளையாட்டுகளில் ஆழ்ந்துவிடுபவரா நீங்கள்? இந்த விளையாட்டுகளின் மீது பொழுதுபோக்கைத் தாண்டிய ஈடுபாடும் ஆர்வமும் உங்களுக்கு உண்டா? மென்மேலும் புதிதாகக் கற்கவும் புதுமைகளைப் படைக்கவும் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் நீங்கள் தயாரா? இந்தக் கேள்விகளுக்கு உங்களுடைய பதில், ஆம் என்றால் வீடியோ கேம் விளையாட்டையே படிப்பாகவும் பணிவாழ்க்கையாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

வீடியோ கேம் என்பதன் குறுகிய எல்லைகளை, ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்ப வளர்ச்சியும் அலைக்கற்றைத் தொழில்நுட்பங்களும் தகர்த்துவிட்டன. கணினி, ஸ்மார்ட் ஃபோனின் இயங்கு தளங்கள் உதவி உடன் மெய்நிகர் (virtual reality) உலகின் விளையாட்டுகள் வேறு தளத்துக்கு உயர்ந்துள்ளன. அதிலும் கேமிங் துறைக்கான மாபெரும் சர்வதேசச் சந்தையையும் உலகின் அதிகப்படியான இளைய சமுதாயத்தினரையும் கொண்டிருக்கிறது இந்தியா.

அதனால், இந்தத் துறை மளமளவென இங்கு வளர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது வருடத்துக்கு 30 சதவீதத்தில் வளர்ச்சி அடைந்துவரும் ‘கேமிங்’ துறை அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 100 கோடி டாலர் மதிப்புக்கு உயரும் என நாஸ்காம் கணித்திருக்கிறது.

சரியான படிப்பு, பணிவாய்ப்பைக் கைகொள்வது என்பது, சரியான நேரத்தில் அந்தத் துறையில் காலடி வைப்பதன் மூலமே சாத்தியமாகும். இந்தியச் சந்தையில் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் இந்த கேமிங் துறையில் இணைந்துகொள்ள இதுவே சரியான நேரமும்கூட. அடிப்படையான கணினி அறிவையும் புரோகிராமிங் திறனையும் வளர்த்துக்கொண்டு அனிமேஷன், கேமிங் படிப்புகளில் விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகளுடன் கேமிங் துறை இரு கரம் விரித்துக் காத்திருக்கிறது.

விரிவடையும் விளையாட்டு

டி.வி. அல்லது திரையில் கூடுதல் மின்னணு உபகரணங்களை இணைத்துதான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தோம். தற்போது நவீன மொபைல் ஃபோன் செயலிகள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அத்தகைய விளையாட்டுகள் எல்லையற்றுப் பரந்து விரிந்துகொண்டிருக்கின்றன.

உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் ஜோடி சேர்த்தோ போட்டியிட்டோ இன்று விளையாட முடியும். இவற்றுடன் எக்ஸ் பாக்ஸ், பிளே ஸ்டேஷன் போன்ற விளையாட்டுக்கென்றே தனியான சந்தையும் தம்போக்கில் அடுத்த களத்துக்குச் சென்றுள்ளது. விளையாட்டை விளையாட்டாகக் கையாண்டது போக, வர்த்தகம், வங்கி நிர்வாகம், சந்தைப்படுத்தல், கற்றல்-கற்பித்தல், மருத்துவம் எனப் பல்வேறு துறைகளிலும் கேமிங் துறையின் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆச்சரியமாய் அவை வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகின்றன. உதாரணத்துக்கு சிமுலேஷன் தொழில்நுட்பம் வாயிலாக உட்கார்ந்த இடத்திலேயே விளையாட்டாக கார் முதல் விமானம்வரை இயக்கக் கற்றுத்தரப்படுகிறது. விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அதே முறையில் கடினமான அடிப்படைப் பாடங்களை விளக்க முடிகிறது. சேமிப்பு முதலீட்டு உத்திகள் விளையாட்டு நுட்பங்களின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்படுகின்றன. மருத்துவப் பரிசோதனைகளில் கேமிங் துறையின் 3டி நுட்பங்கள் உதவுகின்றன. இந்த வகையில் கேமிங் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி விளையாட்டுக்கு அப்பாலும் விரிவடைந்து வருகிறது.

பரவலான பணி வாய்ப்புகள்

புதுமையை உருவாக்கும் ஆர்வமும் படைப்பாற்றலும் உள்ளவர்கள் சாதிப்பதற்கான துறை கேமிங். இந்த அடிப்படையுடன் கூடுதலாகச் சில அத்தியாவசியத் திறன்களை வளர்த்துக்கொள்வது சிறப்பு. மாயா, மேக்ஸ், ஃபோட்டோஷாப், Zபிரஷ் போன்றவை இதில் சேரும். அடுத்தபடியாக 2டி, 3டி அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ் படிப்புகளைச் சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் எனப் பல வகைகளில் படிக்கலாம். இவற்றில் தொடங்கிப் பல நவீன உத்திகளைக் கற்றுக்கொள்வதுடன் அவை வளரும் வேகத்தில் மேம்படுத்திக்கொள்வதும் அவசியம். இது கேமிங் துறையில் பணிபுரிபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது.

மற்றொரு சவால், கேமிங் என்பது புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பல நாடுகளில் பல்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் மத்தியில் புழங்குவது. எனவே வரலாறு, புவியியல், கலாச்சாரம், வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் ஆர்வம் உள்ளிட்டவற்றை ஓரளவேனும் அறிந்துவைத்திருப்பது கேமிங் துறையில் ஜொலிக்க உதவும்.

கேமிங் துறை பணிவாய்ப்புகள் கேம் ஆர்ட்டிஸ்ட் என்பதில் தொடங்கி டெவலப்பர், டிகோடர், டெஸ்டர், புரோகிராமர் என ஐ.டி. துறை மாதிரியைச் சரி பாதி உள்ளடக்கி இருக்கும். இவற்றுடன் ஆடியோ இன்ஜினீயர், 3டி மாடலர் உள்ளிட்ட கேமிங் துறைக்கான தனிப் பணியிடங்களும் உண்டு. இவற்றில் ஆர்டிஸ்ட் பணியிடங்களில் நுண்கலைப் படிப்புகளைக் கணினி அடிப்படையுடன் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

அடுத்தபடியாக நாமறிந்த பலவகை அனிமேஷன் சார்ந்த படிப்புகளை முடித்தவர்களும் சேர்ந்துகொள்ளலாம். முழுநேரப் படிப்பாக கேமிங் துறையில் ஈடுபட விரும்புவோர், பிளஸ் டூவுக்குப் பிறகு பி.எஸ்சி. கேமிங் அல்லது ‘அனிமேஷன் மற்றும் கேமிங்’ ஆகிய பட்டப் படிப்புகளில் சேரலாம். இதர அறிவியல் அல்லது பொறியியல் பட்டம் பெற்றவர்களும் கூடுதலாகத் துறை நுட்பம் சார்ந்த பயிற்சிகளைப் பயின்று கேமிங் துறைக்கான தகுதியைப் பெறலாம்.

வீட்டிலிருந்தே படிக்கலாம், பணிபுரியலாம்

பத்தாம் வகுப்பு முடித்ததுமே கேமிங் துறையின் அடிப்படைகள், அனிமேஷன் படிப்புகள் போன்றவற்றை ஆர்வமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம். கேமிங் துறைக்கான திறன்களை இலவசமாகவும் ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம். ஆரம்ப நிலையில் இந்தத் துறையில் அனுபவமுள்ளவர்களின் உதவி சற்று தேவைப்படும். பின்னர் ஆர்வத்தின் அடிப்படையில் அவற்றைக் கற்றுக்கொள்வதன் வேகமும் முழுமையும் அமையும்.

அதேபோல வேறு ஏதேனும் பணியில் இருந்தவாறு அல்லது முழு நேரப் பணியாக வீட்டிலிருந்தபடியே கேமிங் துறையில் சம்பாதிக்க முடியும். இதற்கு அடிப்படையான மென்பொருட்கள், இணைய இணைப்புடனான கணினி அவசியம். வெளி நாட்டிலிருந்தபடி பல்வேறு நிறுவனங்கள் இவ்வகையில் கேமிங் துறை பணி வாய்ப்புகளை வழங்கிவருகின்றன. இந்தத் துறையில் புதிதாக நுழைபவர்கள் பத்தாயிரங்களில் தொடங்கி அனுபவத்தையும் திறமையையும் பொறுத்து லட்சங்களில் மாத ஊதியத்தைப் பெற முடியும்.

# ‘கேமிங்’ துறை அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 100 கோடி டாலர் மதிப்புக்கு உயரும்.

# உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் ஜோடி சேர்த்தோ போட்டியிட்டோ இன்று விளையாட முடியும்.

# மாயா, மேக்ஸ், ஃபோட்டோஷாப், Zபிரஷ், 2டி, 3டி அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ் படிப்புகளைச் சான்றிதழ், டிப்ளமோ, பட்டமாக படிக்கலாம்.

# இந்த ஆண்டு உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் இந்தியாவின் பங்கேற்பு இல்லாது போனாலும், ‘ஃபிபா பிளே ஸ்டேஷன்’ விளையாட்டுகளை இந்தியர்கள் உற்சாகமாக விளையாடிக் களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x