Published : 31 Jul 2018 11:12 AM
Last Updated : 31 Jul 2018 11:12 AM

ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு?

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை இந்த ஆண்டு உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்த மாணவர்களிடையே கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மாறும் முறை

ஏற்கெனவே, சி-சாட் தேர்வு இப்படித்தானே நடத்தப்படுகிறது. தகுதித் தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்கள் காத்திருந்துதானே காலிப் பணியிடங்களில் சேர்கிறார்கள் என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு. ஒரு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் சில ஆண்டுகள் வரையில் காலிப் பணியிடங்களுக்கு முயலலாம் என்ற ஏற்பாடு அது. அந்தத் தேர்வோடு தமிழ்நாட்டுக்குள் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஒப்பிட முடியாது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் முடித்தவர்களும் கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு, அந்த வரிசையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே நடைமுறையாக இருந்துவந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, அவ்வப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? அதை அரசு விளக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துகொண்ட வரிசையின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. படித்து முடித்து வெகுகாலம் சென்றபிறகு பணிக்கு வருபவர்கள் பாடங்களை  மறந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படியென்றால் இப்போது கல்லூரியிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வெளியே வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்குப் பாடங்கள் மறந்துபோகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான தேர்வு என்று ஏன் இரண்டு தேர்வுகளை நடத்த வேண்டும்?

தகுதி இல்லையா?

இரண்டு கட்டத் தேர்வுகளை எழுதி வென்று ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள், சிறப்பாகப் பணிபுரிவார்கள் என்று ஒரு நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. அப்படியென்றால் அவர்கள் கல்லூரியில் கற்ற கல்வி தரமில்லாததா என்ற கேள்வியும் எழுகிறது. ஓராண்டு படிப்பாக இருந்த பி.எட். படிப்பு இரண்டாண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பை முடித்த அனைவருமே அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இளங்கலை, முதுகலை என்று படிப்பைத் தொடரவே செய்கிறார்கள். அப்படியும் ஆசிரியர் பணிக்கு அவர்கள் தகுதிபெறவில்லையா என்ன?

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கவனமாகக் கையாள வேண்டிய அரசு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுபவர்களை நோக்கியே திருப்பிவிடுகிறது என்பதுதான் இந்த அரசாணையின் நோக்கமாக இருக்க முடியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் கல்வித் துறைப் படிப்புகளையும் அரசுதான் கண்காணிக்கிறது. அப்படியென்றால் அவர்களைத் தகுதிப்படுத்த அரசு தவறிவிட்டதா? 

பட்டம் பெற்று, வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்களைக் காத்திருக்கச் சொன்னாலும் தவறு இல்லை. குறைந்த பணியிடங்களுக்கு அதிக போட்டிகள் நிலவும் நிலையில் ஆசிரியராவதற்கான தகுதியே உனக்கு இல்லை என்று தம் மீதான பழியை மாணவர்களை நோக்கி திருப்பி வீசப்போகிறது தமிழக அரசு.

நோக்கம் என்ன?

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவால் வேலை கொடுக்க முடியாத நிலை. ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளாலும் வேலை கொடுக்க முடியாத அல்லது விரும்பாத நிலை. தற்போது மேலும் ஒரு தேர்வு மாணவர்களின் மீது சுமத்தப்படுகிறது.

பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு நடத்திவந்தது. சி.பி.எஸ்.இ. வசம் அந்தப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது. அடுத்து தேசிய தேர்வுகள் முகமை அந்தத் தேர்வுகளை நடத்தப்போகிறது. தேசிய அளவில் நடக்கும் அந்தத் தேர்வு, உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மட்டுமல்ல. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பட்டம் படிப்பதற்கு ஊக்கத்தொகையையும் வழங்குவதற்கான தேர்வு.

ஒருவேளை ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கும் அப்படி ஏதாவது உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் இந்தத் தேர்வின் நோக்கம் உண்மையிலேயே கல்வியின் தரத்தை உயர்த்துவதுதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கப்போவதில்லை.

தெருவுக்கு ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டுவருகிறது. அடிப்படைக் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டிய அரசு தனியாரைத் தாராளமாக அனுமதிக்கிறது. தனது பொறுப்புகளிலிருந்து நழுவுகிறது. அரசுப் பள்ளிகளே இல்லாமல் போனால், அப்புறம் ஆசிரியர் எதற்கு?  2012-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து 2017-ல் தேர்வு நடந்தது. அடுத்த தேர்வு எப்போது?

 

அரசுப் பள்ளிகளின் உண்மை நிலை என்ன?

# அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை - 8,000

# அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் - 30 லட்சம்

# ஆசிரியர் பணியிடங்கள் - 1.32 லட்சம்

# காலிப் பணியிடங்கள் - 13,000

 

2017 தகுதித் தேர்வு - ஒரு பார்வை

1. எட்டாம் வகுப்பு வரைக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளை எழுதியவர்கள் - 7.53 லட்சம்

2. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் -  34, 979

3. முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் - 2,00,299

4. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் - 3,521

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x