Published : 14 Apr 2025 04:39 PM
Last Updated : 14 Apr 2025 04:39 PM
சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
'கோவா' தேர்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation-COA)தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தை ()www.dte.tn.gov.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-4 தேர்வுக்கு யாரும் உரிய தொழில்நுட்பக்கல்வித்தகுதி (தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து) விண்ணப்பிக்கலாம் என்றாலும் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டால் அவர்கள் தங்களின் தகுதிகாண் பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களின் பதவி பணிவரன்முறை செய்யப்படும்.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், தமிழக அரசின் சுற்றுலா துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முடியும். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக இருந்தால் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது. மேலும், தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர் , உதவியாளர் பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment