Published : 06 Apr 2025 06:36 AM
Last Updated : 06 Apr 2025 06:36 AM
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருகட்டமாக 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதும், பாடத்திட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சார்ந்த பாடநூல்கள் அதிகபட்சம் 600 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சிரமப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்துக்கு மாநில பள்ளிக்கல்வித் துறையின் பாடப் புத்தகங்களை படித்து வருகின்றனர். ஆனால், பாடப் புத்தக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அவற்றை குறைத்து தேர்வுகளை நடத்துகின்றனர். உதாரணமாக 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் மொத்தம் 9 பாடங்கள் உள்ளன. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் அதை 6 பாடங்களாக குறைத்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். இந்நிலையில், மாநில பாடத்திட்டத்திலும் 1 முதல் 12-ம் வகுப்புக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் பாடத்திட்டம் அதிகபட்சம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டு, பொருத்தமற்ற பாடக் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6, 7, 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 பாடங்கள் 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் 9 பாடங்கள் 7 ஆகவும், 11, 12-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 பாடங்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது பாடநூல்கள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய பாடநூல்கள் வழங்கப்படும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment