Published : 25 Mar 2025 08:49 PM
Last Updated : 25 Mar 2025 08:49 PM
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45-வது பட்டமளிப்பு விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மேடையில் 297 பேருக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் நேரடியாக 1536 பேர் பட்ட சான்றிதழ்களை பெற்றனர். தபால் வழியாக 2898 பேர் உட்பட மொத்தம் 4434 பேர் பட்ட சான்றிதழ்களை பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் பேசும்போது, “தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல புதிய கண்டுபிடிப்புகள், பயிர் வகைகலில் மரபணு மேம்பாட்டில் மையப்பகுதியாக விளங்குகிறது. புவிசார் கிராம வரைபடங்கள், டிஜிட்டல் பயிர் ஆய்வுகள் என வேளாண் துறை டிஜிட்டல் மறுவடிவமைப்பை அளித்துள்ளது.
இ-நாம் திட்டத்தில் 2 கோடி விவசாயிகள் மற்றும் 2.5 லட்சம் வர்த்தகர்களை மேம்படுத்தி உள்ளது. இந்தியாவில் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2800 ஆக அதிகரித்துள்ளது. இது மாணவர்களின் புதுமையான திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. வரும் 2050-ல் உலக அளவில் 10 பில்லியன் மக்களுக்கு உணவுத் தேவை 70 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. குறிப்பாக 10-ல் ஒரு பங்கு மக்கள் பசியால் வாடும் சூழல் உள்ளது. மாணவர்கள் ஒரு விதையை உருவாக்கினால் ஒட்டுமொத்த நாட்டை மாற்றலாம். அதேபோல விவசாய நடைமுறையை மாற்றினால் தலைமுறையை மாற்றலாம்” என்றார்.
விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்று பேசும்போது, “தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு, எம்.எல். டேட்டா அனாலிசிஸ், 3டி பிரிண்டிங், பயோ-ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் ஆய்வு படிப்புகளை வழங்கி வருகிறது. "செம்மை மதார்" திட்டத்தின் மூலம் பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கிறது. இதில் 52 மகளிர் ஸ்டார்ட் அப்களை தொடங்கி உள்ளனர். இணையவழி சந்தையான www. tnauagricart.com மூலம் விவசாய இடுபொருட்களை விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் மாதம் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கிறது. 2024-ல் 11 தயாரிப்பு காப்புரிமைகள், 58 வடிவமைப்பு காப்புரிமைகள், 2 புவி சார் குறியீடுகள் மற்றும் 28 பதிப்புரிமைகளைப் பெற்றுள்ளது. மேலும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 99 தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன” என்றார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், வேளாண்மை முதன்மையர் வெங்கடேசபழனிசாமி, முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் சுரேஷ்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment