Published : 27 Feb 2025 07:35 AM
Last Updated : 27 Feb 2025 07:35 AM
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இதன் மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் சில மாற்றங்களை செய்து வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்விவரம் பின்வருமாறு: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டில் முதல்கட்டமாக பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருமுறை நடத்தப்படும். அதாவது முதல்கட்டமாக பிப்.17 முதல் மார்ச் 6-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக மே 5 முதல் 20-ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
இந்த தேர்வெழுத 26 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்விரு தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். பிப்ரவரியில் எழுதும் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் மாணவர்கள் மனநிறைவு கொண்டால், மே மாதம் நடைபெறும் தேர்வை எழுத வேண்டியதில்லை. அதேநேரம் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினால் மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம். இந்த மாற்றங்கள் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவும், மனஅழுத்தத்தை தவிர்க்கவும், பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும் வழிவகை செய்யும்.
மேலும், இரண்டாம் கட்டத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும். அதேபோல் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் எளிது மற்றும் கடினம் என இரு வகைகளாகப் பிரிக்கப்படும். அதில், விரும்பும் வினாத்தாளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அவற்றில் கடினமான வினாத்தாளை தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே குறிப்பிட்ட பாடங்கள் சார்ந்த பிரிவில் பட்டப் படிப்புகள் மற்றும் தொடர்புடைய பிற உயர்கல்வி பிரிவுகளை பயில முடியும்.
முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ் 1 வகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். மேலும், இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.cbse.gov.in/ எனும் வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...