Published : 12 Feb 2025 11:15 PM
Last Updated : 12 Feb 2025 11:15 PM
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை , பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் சத்யபிரத சாஹூ அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய தேடுதல் குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மைக்கல்வி நிறுவன துணைவேந்தரும், யுஜிசியின் உறுப்பினருமான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரியும், அரசின் பிரதிநியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஓய்வுபெற்ற இயக்குநருமான (கிளினிக்கல்) டாக்டர் பி.தனபாலனும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக கல்விக்குழுவின் பிரதிநிதியாக அப்பல்கலைக்கழகத்தின் கால்நடை பொருட்கள் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாமும் இடம்பெற்றுள்ளனர்.
ஆளுநரின் பிரதிநிதியான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரி குழுவின் அமைப்பாளராக செயல்படுவார். புதிய துணைவேந்தரை தேர்வுசெய்யும் வகையில் தேடுதல் குழு 3 பேர்களை வேந்தருக்கு பரிந்துரை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யுஜிசி பிரதிநிதி?- தமிழக அரசால் அமைக்கப்படும் துணைவேந்தர் தேடுதல் குழுவைப் போலே தற்போது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவிலும் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி என 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மைக்கல்வி நிறுவன துணைவேந்தரான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரி யுஜிசியின் உறுப்பினராகவும் உள்ளார்.
ஆனால் அவர் தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் (இசை பல்கலைக்கழகம் நீங்கலாக) வேந்தருமான ஆர்.என்.ரவி புதிய துணைவேந்தர்களின் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழகழகத்தின் பிரதிநிதி ஆகியோருடன் யுஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில்தான் தமிழக அரசுக்கும் வேந்தரான ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment