Published : 06 Jan 2025 02:06 PM
Last Updated : 06 Jan 2025 02:06 PM
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி- தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி-ல் இருந்து 36 கி.மீ. தொலைவில் தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய துறைமுகங்கள், நீர்வழிகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பிரத்யேக வசதிகள் இங்கே உள்ளன. இது சிக்கலான அலைகள், கடல் நீரோட்டத்தைக் கையாளக் கூடிய பல்திசை ஆழமற்ற அலைப்படுகையாகும்.
துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் (National Technology Centre for Ports and Waterways and Coasts) மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்கூடம், துறைமுகங்கள் - கடல்சார் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள், மேம்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாகும்.
இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகச் செயல்படுவதுடன், துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (Inland Waterways Authority of India- IWAI) உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறது.
இந்தியாவுக்கு ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தின் அவசியத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் முரளி, “இந்த ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் சர்வதேச அரங்கில் சென்னை ஐஐடி-ஐ பெரிய அளவில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். ஆராய்ச்சி- தொழில் பயன்பாடுகளுக்கான ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆய்வகத்தில் அலைகளை உருவாக்க பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது” எனக் குறிப்பிட்டார்.
சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் வி.ஸ்ரீராம் கூறுகையில், “சில பொருட்கள் இங்கு கிடைக்காததால் நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் புனையமைப்புகளில் (fabrications) பெரும்பாலானவை சென்னை ஐஐடி உருவாக்கியவை. கட்டுமானத் திட்டமிடல், தொலைத்தொடர்பு, வடிவமைப்பு போன்ற இயக்கத்திற்கான வசதிகள் ஐஐடி-யில் தயார் நிலையில் இருந்து வருவதுடன், நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டன. புதிய துறைமுகங்கள், கடல்சார் பொறியியல், உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் என இந்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்” என்றார்.
பல்கலைக்கழக அளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல்அலை நீரோட்டம் மற்றும் படுகையை இயக்கி வரும் ஜெர்மனியின் ஹானோவரில் உள்ள லீப்னிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டார்ஸ்டன் ஸ்லூர்மான் (Prof. Torsten Schlurmann), இந்த புதிய ஆராய்ச்சிக் கூடம் அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடுவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார். சென்னை ஐஐடி-க்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்கி வரும் ஸ்லூரமான், “இந்த முயற்சி கடல்சார் அறிவியல்- பொறியியல் துறையில் சென்னை ஐஐடி-ன் தரத்தை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக உயர்த்தச் செய்வதுடன், பல்வேறு துறைகளில் பரந்த அளவில் சர்வதேச ஒத்துழைப்பு கிடைப்பதையும் எளிதாக்கும்” எனத் தெரிவித்தார்.
கட்டமைப்புகளில் ஏற்படும் முப்பரிமாண அலைகளின் தாக்கம் முக்கியமானது என்பதால், அடிப்படைப் புரிதலுக்கும் பயன்பாட்டுத் திட்டங்களுக்கும் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். துறைமுகம், கடல்சார், கடற்கரைக்கு அப்பால், உள்நாட்டு நீர்வழிகள், ஆழமற்ற நீர்வழிமாற்றுத் திட்டங்களிலும் இந்த படுகையைப் பயன்படுத்தலாம். வண்டலை எடுத்துச் செல்லுதல், மொபைல் படுக்கை மாதிரியாக்கம், கவச அலகுகளின் நிலைத்தன்மை, ஹைட்ராலிக்- ஹைட்ரோடினமிக் செயல்திறன், அலைத்தாக்கத்தை ஏற்றுதல் ஆகியவற்றை அறிந்து கொள்வதுடன், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வடிவமைப்பு அம்சங்களைத் தீர்மானிப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.
கடலோரக் கட்டமைப்பு வகைகளை சோதித்தல், கடலோரக் கட்டமைப்புகளின் தாக்கத்திற்கு பிந்தைய பகுப்பாய்வு, பெரிய அளவிலான மிதக்கும் சூரியமின்சக்தித் திட்டங்கள், காலநிலை மாற்ற விளைவுகள் போன்ற எண்ணற்ற பல்வேறு திட்டப் பணிகளில் பயன்படுத்துவது இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் முக்கிய நன்மைகளாகும். தேவைப்படும் பட்சத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு திட்டங்களை இணையாகவும் செயல்படுத்த முடியும்.
இந்தியக் கடலோரப் பகுதிகளில் புதிய துறைமுகங்கள் வளர்ந்துவரும் நிலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கூடம் திட்டமிடலுக்கு உதவும் முக்கிய கருவியாக அமைந்துள்ளது. இந்த அளவுக்கு பெரிய அளவிலான ஆய்வகத்தை உருவாக்குவதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவைக் கொண்டு, இந்தியாவில் உள்ள என்ஐடி-க்கள், ஐஐடி-க்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இத்தகைய அதிநவீன ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதற்கு சென்னை ஐஐடி உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது.
இதன் பரிமாணங்கள் மற்றும் மட்டுஅலைகளை பெரிய அளவில் உருவாக்குவோர் பல்வேறு திட்டப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியும். கடலலைகள், நீரோட்டம் மற்றும் இவை இரண்டின் கலவை ஆகியவற்றை ஒரே நேரத்தில் உருவாக்கலாம். தற்போது கிடைக்கக் கூடிய வேகவரம்புகள், படுகை அளவு ஆகியவற்றின் காரணமாக, எடுத்துக்காட்டாக 5எஸ்- 18எஸ் என்ற வேக வரம்புகளைக் கொண்ட, 3மீ. வரை கணிசமான அலை உயரம் கொண்ட காலவரம்புடன் 1:10 என்ற அளவிலோ அல்லது பெரிய அளவிலோ எளிதாக உருவாக்க முடியும். தொட்டியைச் சுற்றிலும் நீரோட்ட வசதி, படுகை உள்ளே நீரோட்டங்கள் சுழலும் முறை போன்றவை எதிர்காலத்தில் இன்னும் சிறந்த அளவில் செயல்படுத்தப்படும்.
தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பரந்த அளவிலான பிரச்சினைகளுக்கு துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் (NTCPWC) பயனளிக்கும் தீர்வுகளை வழங்குகிறது. இதுதவிர உள்ளூர், பிராந்திய, தேசிய, சர்வதேச அளவிலான கடல்சார் போக்குவரத்துத் துறையில் அறிவியல் ரீதியான ஆதரவு, மதிப்புவாய்ந்த கல்வி, பயன்பாட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவற்றையும் இந்த மையம் அளித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT