Published : 31 Dec 2024 12:53 AM
Last Updated : 31 Dec 2024 12:53 AM
பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் இதர பலன்களை பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அலுவலகங்கள், பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு போன்ற அலுவல் பணிகளுக்கு ‘களஞ்சியம்’ செயலியை பயன்படுத்த ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த செயலி முழுவதுமாக பயன்படுத்தப்படுவது இல்லை என கருவூல கணக்கு துறை தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து நிலை அலுவலர்கள், ஆசிரியா்கள், பணியாளா்களும் களஞ்சியம் செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன், விடுப்பு கோரி விண்ணப்பிக்க, ஓய்வூதிய பலன்கள் கோர, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கருத்துரு அனுப்ப, அனைத்து வகை முன்பணம், சம்பள சான்று பெற அந்த செயலியை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் செயலியின் பயன்பாடு 100 சதவீதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. வரும்காலங்களில் களஞ்சியம் செயலி பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, ஜனவரி முதல் ஓய்வூதிய கருத்துருக்களை இணைய வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT