Published : 30 Dec 2024 03:03 PM
Last Updated : 30 Dec 2024 03:03 PM

திருச்சி என்ஐடி-யில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி பூங்கா - முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு

திருச்சி என்ஐடி முன்னாள் மாணவர்கள் சங்க உலகளாவிய சந்திப்பு நிகழ்சிக்கான லோகோவை என்ஐடி இயக்குநர் ஜி.அகிலா வெளியிட்டார்.

சென்னை: பொறியியல் மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் வகையில் திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி செலவில் என்ஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிப்பு பூங்கா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக திருச்சி என்ஐடி இயக்குநர் ஜி.அகிலா , முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கே.மகாலிங்கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: “வைரவிழா காணும் திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் 48 ஆயிரம் பேர் உலகின் பல்வேறு இடங்களில் விரிந்து பரந்து உள்ளனர். அவர்களில் 930 பேர் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாகவும், 130 பேர் நிறுவனர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

1987 முதல் இயங்கி வரும் முன்னாள் மாணவர்கள் சங்கம் எங்கள் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இங்கு பயிலும் மாணவர்களின் கல்விக்கும் பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் என்ஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஜனவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முன்னாள் மாணவர்கள் 1500 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தலைமை வணிக உளவியலாளர் கோபி கள்ளயில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.முன்னாள் மாணவர்கள் சார்பில் என்ஐடி-யில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் வகையில் என்ஐடி வளாகத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.15- கோட மதிப்பீட்டில் என்ஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா நிறுவப்பட உள்ளது. இந்த பூங்காவில் தொழில்முனைவோர்கள் தங்கள் ஆராய்ச்ச மையங்களாக அமைப்பார்கள். இங்கு வேளாண்மை, நிதி, விண்வெளி , பசுமை, தொழில்நுட்பங்கள், குவாண்டம் கணினி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். மாணவர்கள் படிக்கும்போதே அவர்களை தொழில்முனைவோர்களாக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பூங்கா வாயிலாக மேற்கொள்ளப்படும்.

அவர்களின் தொழில்முனைவு முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.ஒரு மாணவரின் படிப்புக்காலம் முழுவதற்கும் அவருக்கு தேவையான நிதியுதவி மற்றும் வழிகாட்டு உதவிகளை அளிக்கும் வகையில் "அடாப்ட் அ ஸ்டூடன்ட் " என்ற திட்டம், வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேரும் என்ஐடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பெற உதவும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் முன்னாள் மாணவர்களால் செயல்படுத்தப்பட உள்ளன,” என்று அவர்கள் கூறினர்.

புதிய எம்டெக் படிப்பு அறிமுகம்: என்ஐடி இயக்குநர்அகிலா தொடர்ந்து கூறுகையில், “தற்போது என்ஐடியில் 11 வகையான பிடெக் படிப்புகளும், 31 வகையான எம்டெக் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பிடெக் படிப்பில் ஆண்டுதோறும் 1500 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மாறி வரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச்சூழலுக்கு ஏற்ப புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் எம்டெக் ( ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்) என்ற ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த படிப்பு தொடங்கப்படும்" என்றார். துணை இயக்குநர் (கல்வி நிறுவன மேம்பாடு மற்றும் முன்னாள் மாணவர் விவகாரங்கள்) ஜி.உமா கூறும்போது, "இந்த ஆன்லைன் படிப்பில் பிடெக் பட்டதாரிகள் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ பட்டதாரிகள் சேரலாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x