Published : 24 Dec 2024 05:48 PM
Last Updated : 24 Dec 2024 05:48 PM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகிறது. முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு கல்வியமைச்சர் நமச்சிவாயம் இதை உறுதி செய்தார்.
மத்திய அரசு 5, 8ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகியுள்ளது. புதுச்சேரியிலுள்ள பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளில் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியுள்ளது.
முதல்முறையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பொது தேர்வுகளையும் புதுவை மாணவர்கள் எழுத உள்ளனர். தற்போது ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், கட்டாய தேர்ச்சி ரத்து அமலாகியுள்ளது. இவ்விஷயத்தில் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுவை மாநிலத்தில் கட்டாய தேர்ச்சி ரத்து அமலாகுமா என கேள்வி அனைத்து தரப்புக்கும் எழுந்துள்ளது.
இதையடுத்து, கல்வியமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, ''முதல்வர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்து கட்டாய தேர்ச்சி முறை ரத்து தொடர்பாக முடிவு எடுப்போம்'' என்றார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்தார். அதயைடுத்து இதுபற்றி கல்வியமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "தேர்ச்சி முறை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவை புதுச்சேரி அரசு ஏற்று செயல்படும். புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் உயரும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வி துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT