Published : 14 Dec 2024 03:10 AM
Last Updated : 14 Dec 2024 03:10 AM
கனமழை விடுமுறையால் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறாத அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரியில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 16-ல் தொடங்கி 23-ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறையானது வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் தற்போது தள்ளிப் போயுள்ளன.
இந்நிலையில், மழை பாதிப்பால் அரையாண்டுத் தேர்வு நடைபெறாத பள்ளிகளுக்கு அந்த தேர்வை ஜனவரியில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘ஏற்கெனவே ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தற்போது எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதோ, அவற்றுக்கு ஒத்தி வைக்கப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படும். எனினும், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இருக்காது. திட்டமிட்டபடி டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT