Published : 24 Jul 2018 10:24 AM
Last Updated : 24 Jul 2018 10:24 AM
கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றிருக்கலாம். ஆனால், உலகக் கால்பந்து ரசிகர்களின் மனத்தை வென்றது என்னவோ இறுதியாட்டத்தில் தோல்வியடைந்த குரேஷிய அணிதான். அந்த அணி கோப்பையைக் கோட்டை விட்டிருக்கலாம். ஆனால், அந்த அணி இன்று கோபுரமாய் உயர்ந்துநிற்கிறது. கடந்த ஆண்டுவரை உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றை குரேஷிய அணி தாண்டுமா என்று நினைத்தவர்கள்தாம் அநேகர்.
ஆனால், இன்றோ உலகக் கோப்பை இறுதிச் சுற்றுவரை முன்னேறி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது குரேஷிய அணி். இந்த தலைகீழ் மாற்றத்துக்கு யார் காரணம்? இந்த மாற்றத்துக்கு வித்திட்டவர், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு குரேஷிய அணி பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்தது. தொடர் தோல்விகளால் தள்ளாடிக் கொண்டிருந்தது. உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்பாகப் பயிற்சியாளராக இருந்த ஆண்டி காஸிக்கை குரேஷியா கால்பந்து கூட்டமைப்பு நீக்கிவிட்டு டாலிக்கைப் பயிற்சியாளராக நியமித்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில்தான் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு குரேஷியா தகுதிபெறுமா என்று அந்தக் குட்டி நாடே எதிர்பார்த்த வேளையில்தான் அவர் பயிற்சியாளரானார். ஆனால், இந்த ஒன்பது மாதங்களில் அந்த அணியை பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார் டாலிக்.
அந்த அணியை வெற்றிகரமான அணியாக மாற்றிக்காட்டியதில் ஸ்லாட்கோ டாலிக்குக்கு பெரும் பங்கு இருக்கிறது. இன்று அவரை அந்த அணியின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கிறார்கள். இதற்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் டாலிக்.
கற்ற பாடம்
குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு டாலிக்கைப் பயிற்சியாளராக நியமித்தபோது, அந்தப் பணியை முழுமையாக அவர் ஏற்கவில்லை. “தகுதிச் சுற்றைத் தாண்டி உலகக் கோப்பைக்கு குரேஷியா அணி சென்றால்தான் தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன். இல்லை யென்றால், சென்றுவிடுவேன்” என்று சொல்லிவிட்டுத்தான் பயிற்சி யாளரானார். ஆனால், தகுதிச் சுற்றை மட்டுமல்ல; உலகக் கோப்பை இறுதியாட்டம் வரை குரேஷியா சென்றது என்றால், டாலிக்கின் மாயாஜாலம் அப்படிப்பட்டது.
1998-ல் குரேஷியா அணி அரையிறுதிவரை சென்றது. அப்போதும் பிரான்ஸ் அணியிடம்தான் குரேஷியா தோல்வியடைந்தது. ஆனால், குரேஷியா அணியை அரையிறுதிவரை அழைத்துச்சென்ற பெருமை அந்த அணியின் ஆலோசகரான மிராஸ்லவ் பிளேஸே விக்கையே சாரும். மீண்டும் அப்படி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்த வேண்டுமென்றால் நீண்ட கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று டாலிக் நினைத்தார். அதன்படி சென்றதால்தான் இன்று குரேஷிய அணி பிற அணிகளுக்குப் பாடமாகி இருக்கிறது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு
45 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட குரேஷியாவில் பெரிய கால்பந்துப் போட்டிக் கான கட்டமைப்போ சொல்லிக் கொள்ளும்படியான வசதியோகூட இல்லை. சர்வதேசத் தரத்திலான மைதானம்கூட குரேஷியாவில் இல்லை. ஆனால், கால்பந்தாட்ட வெறி அவர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது. வீரர்கள் எல்லோருமே மிகவும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். குரேஷியா அணியில் சிறுசிறு விஷயங்கள்கூட பூதாகரமாக வெடிக்கும். டாலிக் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பு சிறு பிரச்சினைக்காக ஜெர்சியைக்கூட அணிய வீரர்கள் மறுத்தார்கள்.
டாலிக் பயிற்சியாளரான பிறகு இதுபோன்ற பிரச்சினைகளால் ஏற்படும் கவனச்சிதறல்களை முடிவுக்குக் கொண்டுவந்தார். நேர்மறையான விஷயங்களை வீரர்களின் மனத்தில் விதைத்தார். தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டால் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஜொலிப்பதெல்லாம் கனவாகவே இருக்கும் என்று நினைவூட்டினார். சிறுசிறு விஷயங்களால் வீரர்களுக்கு மனச் சோர்வும் கவனச்சிதறலும் ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தார் டாலிக். அதற்கு இப்போது கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.
அது மட்டுமல்ல; இளம் வீரர்களின் அணுகுமுறைகளை முழுமையாக மாற்றினார். அதன்மூலம் ஒட்டுமொத்த அணிக்கும் புதிய வடிவத்தைக் கொடுத்தார். பயிற்சியின்போது வீரர்களின் குறைபாடுகளைக் கண்டறிவது, அதைச் சரிசெய்வது, சிறப்பாகச் செயல்படுபவர்களை ஊக்கப்படுத்துவது, அந்தத் திறமையைத் தக்கவைக்க ஆலோசனைகளை வழங்குவது எனத் தன்னுடைய பயிற்சியை அமைத்துக்கொண்டார். அறிமுக வீரர், அனுபவ வீரர் என்ற கதையெல்லாம் அவரிடம் எடுபடவில்லை.
சரியாகச் செயல்படாத அனுபவ வீரர்களைத் தயக்கமின்றி வெளியேற்றினார். திறமையான அறிமுக வீரர்களை அரவணைத்தார். இதன்மூலம் அணிக்குப் புத்துயிர் ஊட்டினார். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடக்கும்போதும் இந்த உத்திகளை மறக்காமல் பின்பற்றினார்.
இறுதியாட்டத்துக்கு முதன் முறையாக முன்னேறியபோதும் கொண்டாட்டங்களை அளவோடு தான் கொண்டாடினார்கள் குரேஷிய வீரர்கள். மிதமிஞ்சிய தன்னம்பிக்கை எதிர்மறையாகப் போய்விடும் என்பதால் கொண்டாட்டத்தைக்கூடத் தள்ளிப்போட்டனர். பிரான்ஸ் அணி இயல்பாகவே நுணுக்கங்களைக் கற்ற அணி. அந்த அணியுடன் மோதும் போது அதைவிட நுணுக்கங்கள் தெரிந்தால்தான் அவர்களை வெற்றிகொள்ள முடியும்.
அந்த வகையில் குரேஷியப் பயிற்சியாளர் டாலிக் தங்களுடைய அணி வீரர்களைக் கடைசி கட்டம் வரை மெருகேற்றினார். அதற்கேற்ப அணியை டாலிக் தயார் செய்தார். ’சேம் சைட் கோல்’், நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய பெனால்டி ஆகிய இரு தவறுகளால்தாம் இறுதியாட்டத்தில் குரேஷிய அணி தோல்வியடைந்தது. மற்றபடி இந்தத் தொடர் முழுவதுமே வெற்றிக்கொடியை அந்த அணி உயரப் பறக்கவிட்டதற்கு டாலிக்தான் முழுமுதற் காரணம்.
தோல்வியிலும் உற்சாகம்
88 ஆண்டுகாலக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிவரை முன்னேறி தோல்வி அடைந்த குரேஷிய அணி நொறுங்கிப்போய்விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இறுதிப்போட்டி தோல்விக்குப் பிறகு குரேஷிய வீரர்கள் சோர்ந்துபோய்விடவில்லை. தங்களுடைய செயல்பாடுகளை எண்ணி பெருமையே கொண்டனர். மிகப் பெரிய தொடரின் இறுதியாட்டத் தோல்விக்குப் பிறகும் வீரர்கள் அப்படிச் செயல்படப் பயிற்சியாளர் டாலிக்தான் காரணம்.
இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு அவர்களுடைய உணர்வுபூர்வமான ஆட்டத்துக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தினார் டாலிக். தோல்விதான் வெற்றிக்கான படிக்கட்டு என்ற நம்பிக்கையை விதைத்தார். உலகக் கோப்பையில் இரண்டாமிடம் பிடித்தத்தை எண்ணி பெருமைப்பட வேண்டும் என்று உரக்கச் சொன்னார்.
“இறுதிப் போட்டியில் தோற்றதால், நீங்கள் திருப்தி அடையாதவராக நினைக்க வேண்டாம். இந்தத் தொடர் முழுவதும் உங்களுடைய செயல்பாடுகளை எண்ணிப் பெருமைப்படுங்கள். ஒவ்வொருவரும் தன்னை நினைத்துப் பெருமைப்படுங்கள். அணியை நினைத்துப் பெருமைப்படுங்கள்” என்று சொன்னார் டாலிக். அதனால்தான் மிகப் பெரிய தொடரின் தோல்விக்குப் பிறகும் குரேஷியாவில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
குரேஷிய கால்பந்து அணியின் இந்த விஸ்வரூபத்தை நாளை சரித்திரம் பேசலாம். ஆனால், ஸ்லாட்கோ டாலிக் என்ற மனிதரை விட்டுவிட்டு குரேஷிய கால்பந்து வரலாற்றை இனி யாரும் பேச முடியாது. ஏனென்றால், அந்த அணியின் சிற்பி அவர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT