Published : 08 Dec 2024 06:46 AM
Last Updated : 08 Dec 2024 06:46 AM
சென்னை: மருத்துவ பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு நாளை (டிச.9) முதல் தொடங்கவிருந்த எழுத்துத் தேர்வுகளை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், கடந்த 2021-22-ம் ஆண்டு மேற்படிப்பில் சேர்ந்த எம்டி மற்றும் எம்எஸ் பயிலும் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான இறுதி எழுத்துத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த எழுத்துத் தேர்வை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைக்கக்கோரி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், எங்களுக்கான இறுதி எழுத்துத்தேர்வு வரும் டிச.9-ம் தேதி முதல் தொடங்கும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுதும் முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆய்வுக் கட்டுரைகள் இணையதள சேவை குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. பதிவேற்றம் செய்ததில் காலவிரயமும் ஏற்பட்டது. இதனால் எங்களால் டிச.9-ம் தேதி முதல் தொடங்கும் இறுதி தேர்வுக்கு தயாராக முடியவில்லை.
எனவே ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், இறுதித்தேர்வுக்கு தயாராகவும் இறுதி தேர்வை தள்ளிவைக்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி அனந்தபத்மநாபன் வாதிட்டார். மருத்துவ பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ஆறுமுகம், தேர்வு கால அட்டவணை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, அறிவிப்பும் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு நாளை (டிச.9) முதல் தொடங்கவிருந்த எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்து, இந்த தேர்வை டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT