Published : 04 Dec 2024 06:24 AM
Last Updated : 04 Dec 2024 06:24 AM
அரசு கல்லூரிகளில் தேவைக்கேற்ப கூடுதலாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘விளைவுகள் அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
உயர்கல்வித் துறையில் தமிழக அரசு பல்வேறு புதுமைகளை செய்துவருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கற்றல், கற்பித்தல் தொடர்பான திட்டங்களை மேம்படுத்துவதுதான் இந்த பயிலரங்கத்தின் நோக்கம்.
அதன்படி மாணவர்களுக்குத் தேவைப்படும் திறனறிவு கல்வி முறைகளை வகுக்க வேண்டும். அந்த திறனறிவுகள் மாணவர்களைச் சென்றடைவதற்கான கற்பித்தல் முறையை உருவாக்க வேண்டும். தொடர்ந்து கற்றல் கற்பித்தல் நிகழ்ந்த பின்னர் மாணவர்களுக்கு கற்பித்தவைகள் சென்று சேர்ந்துள்ளனவா என்பதை உறுதிசெய்ய தேர்வு நடத்தப்பட வேண்டும். அடுத்ததாக கல்வி முறையில் மேலும் முன்னேற்றம் செய்வது குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த 4 படிகளையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க இந்த பயிலரங்கம் உதவிசெய்ய வேண்டும்.
அதன்படி கல்வி முறையால் மாணவர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கை பெற்று தொழில் முனைவோர்களாக மாறவேண்டும். இதுபோன்ற பயிலரங்கங்கள் பல்கலைக்கழகங்களிலும், மண்டல, கல்லூரி அளவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் எம்.பி.விஜயகுமார், தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநர் டி.ஆப்ரகாம், கல்லூரி கல்வி இயக்குநர் இ.சுந்தரவல்லி உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது; கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளமாக ரூ.50,000 வழங்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வலியுறுத்துகிறது. நிதிச் சுமைக்கு இடையேயும் தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25,000 தரப்படுகிறது. அதேநேரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் நிதியாக யுஜிசி ஆண்டுக்கு ரூ.40 கோடி தரவேண்டும். 2017-ல் நிறுத்தப்பட்ட இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
அதேநேரம், மாணவர்களின் கல்வி நலன் கருதி சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து பணியைத் தொடர்கிறோம். மேலும், தேவைக்கேற்ப கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை விரைவில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் நிரந்தர பேராசிரியர்களை உருவாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இன்றி இருப்பதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT