Published : 22 Nov 2024 05:10 PM
Last Updated : 22 Nov 2024 05:10 PM
சென்னை: 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதேபோல், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 7 முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிப்பு, தேர்வு மையம் அமைத்தல் உட்பட முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: "பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அக மதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்களின் 81 - 100 சதவீத வருகைப் பதிவுக்கு 2 மதிப்பெண்ணும், 75-80 சதவீத வருகைப் பதிவுக்கு ஒரு மதிப்பெண் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT