Published : 21 Nov 2024 06:48 PM
Last Updated : 21 Nov 2024 06:48 PM

இனி அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனம்: அண்ணா பல்கலை. திடீர் முடிவு

சென்னை: இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணிநியமனங்களை மேற்கொள்வது என அண்ணா பல்கலைக்கழகம் திடீர் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாம். ஏதேனும் ஒரு துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் பற்றாக்குறை உள்ள வேறு துறையில் பணியமர்த்தலாம். இந்த புதிய உத்தரவு 20.1. 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது,” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவாளரின் இந்த சுற்றறிக்கை காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவி பேராசிரியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அவற்றில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள்.

அண்மையில் தேசிய கல்விக்கொள்கை-2020 தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க சென்னை வந்திருந்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x