Published : 14 Nov 2024 05:13 AM
Last Updated : 14 Nov 2024 05:13 AM
சென்னை: பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் பணி நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல், வெளிநபரை கொண்டு கற்பித்தல் பணி மேற்கொள்வது குறித்து புகார்கள் வந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியின் விசாரணையில், அது உண்மை என கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடக்கக் கல்வி அலகில் தகுதியுள்ள காலி பணியிடத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்ட 6,053 தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு யாரேனும் பணிபுரிகின்றனரா என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது. அந்த வகையில், மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டார கல்வி அலுவலர்களிடம் இருந்து இதுபோல வேறு நபர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை ஏதும் பெறப்படவில்லை.
சமூக ஊடகங்களில் வெளியாவதுபோல, 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT