Published : 12 Nov 2024 08:10 AM
Last Updated : 12 Nov 2024 08:10 AM

சென்னை ஐஐடியில் ஆய்வு மையம்: இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: இஸ்ரோ உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ, வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ, வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. ஐஐடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐஐடி டீன் (தொழில் ஆலோசனை, நிறுவன ஆராய்ச்சி) மனு சந்தானம், இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு, கண்டுபிடிப்பு இயக்கக இயக்குநர் விக்டர் ஜோசப் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியரும், ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் பட்டமாட்டா உடன் இருந்தார்.

இந்த ஆராய்ச்சி மையம் அமைக்க, இஸ்ரோ ரூ.1.84 கோடி நிதியுதவி செய்கிறது. இங்கு ராக்கெட், செயற்கைக் கோள் தொடர்பான வெப்பநிலை மேலாண்மை ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். ராக்கெட், செயற்கைக் கோள் வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் பல்வேறு உதிரிபாகங்கள் சோதனையின்போது உருவாகும் வெப்பநிலை தொடர்பான சிக்கல்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்வார்கள்.

இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள், ராக்கெட்களில் வெப்பநிலை மேலாண்மை தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்ள இந்த மையம் ஓர் ஆய்வு தளமாக செயல்படும். செயற்கைக் கோள் வெப்பநிலை மேலாண்மை, திட, திரவ எரிபொருட்களில் இயங்கும் ராக்கெட்களில் ஏற்படும் எரிதிறன் பிரச்சினை, திரவ எரிபொருள் சேமிப்பு கலனில் ஏற்படும் சவால்கள் தொடர்பான உயர் ஆராய்ச்சி பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.

திரவ, வெப்பவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐஐடி பேராசிரியர்களின் கூட்டு முயற்சியை இந்த மையம் பெரிதும் ஊக்குவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x