Published : 05 Nov 2024 09:47 PM
Last Updated : 05 Nov 2024 09:47 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையானது வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் தளத்தில் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “தமிழகம் முழுவதும் உள்ள அரசு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பதை குறுவள மைய அளவில் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையானது வருகைப் பதிவேட்டுக்கும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின் உடனே அதை சரி செய்ய வேண்டும்.
அதேபோல், மாணவர்கள் யாரேனும் நீண்டகால விடுப்பில் இருந்து வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சார்ந்த தலைமை ஆசிரியர் அவரை எமிஸ் தளத்தில் பொதுப்பகுதிக்கு (Common Pool) அனுப்பிட வேண்டும். தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு இவற்றை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் எமிஸ் இணையதளத்தில் 100 சதவீதம் சரியாக உள்ளது எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT