Published : 04 Nov 2024 12:48 AM
Last Updated : 04 Nov 2024 12:48 AM
சென்னை: அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கு உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வின் மூலம் ஆசிரியர்கள் வட்டாரம், கல்வி மாவட்டம் மற்றும் மாவட்டம் அளவில் விருப்ப மாறுதல் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அரசுக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு இணைய வழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.
அதையேற்று அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையவழியில் பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு ‘யுமிஸ்’ தளம் வழியாக மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவுற்றதும் விரைவில் மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT