Published : 03 Nov 2024 07:33 PM
Last Updated : 03 Nov 2024 07:33 PM
மதுரை: சென்னை பல்கலை., காமராஜர் பல்கலை. உட்பட 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலியிடம் நிரப்பாததால் மாணவர்கள் உயர் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
பொதுவாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி என்பது முக்கியமானது. ஆராய்ச்சி, உயர் கல்வி பயிலும் மாணவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க துணைவேந்தர் பணி அவசியம். தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைகள் செயல்பட்டாலும், கோவை பாரதியார் பல்கலைக்கு 2 ஆண்டாகவும், சென்னை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை.க்கு தலா ஓராண்டாகவும் துணைவேந்தர்கள் நியமிக்கவில்லை.
சென்னை அண்ணா, மதுரை காமராஜர் பல்கலைகளுக்கும் சுமார் 5 மாதத்திற்கு மேலாகியும் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைகளில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்தாலும், வேறு வழியின்றி ஏற்கெனவே இருந்த துணைவேந்தர்களுக்கு பணி நீடிப்பும் செய்திருப்பதாக கூறப்படுகிறது. துணைவேந்தர் இன்றி தொடர்ந்து பாதிக்கப்படுவதாக மாணவர்கள், பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள் புகார்களை எழுப்புகின்றனர்.
பேராசிரியர்கள் சிலர் கூறியது: ''துணைவேந்தர் பதவி காலம் முடிந்த ஒருசில மாதத்திற்குள் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க பல்கலை, ஆளுநர், அரசு சார்பில் 3 பிரதிநிதி அடங்கிய தேடல்குழு அமைக்கப்படும். இக்குழு மூவரை தேர்ந்தெடுத்து அதற்கான பட்டியல் ஆளுநருக்கு அனுப்பும்போது. அதிலிருந்து ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது வழக்கம். தற்போது, அதில் ஏற்பட்ட மாற்றத்தால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதமாகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது.
தேடல் குழுவில் பல்கலை மானியக்குழு (யூஜிசி) சார்பில், ஒரு பிரதிநிதி இடம் பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையால் காமராஜர் உள்ளிட்ட 5 பல்கலைக்கும் துணைவேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலியாக இருக்கும் 5 பல்கலைகளுக்கு, பதவி நீடிப்பு செய்துள்ள 2 பல்கலைக்கும் புதிய துணைவேந்தர்களை நியமிக்கவேண்டும்'' என்றனர்.
காமராஜர் பல்கலை முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கலைச்செல்வன் கூறுகையில், ''காமராஜர் பல்கலையை பொறுத்தவரை செல்லத்துரை முதல் அடுத்து வந்த 2 துணைவேந்தர்களும் தங்களது 3 ஆண்டு பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. 11 மாதம் இருக்கும்போதே, உடல் நிலையை காரணம் காட்டி துணைவேந்தர் குமார் ராஜினாமா செய்துவிட்டு சென்றதால் 4 மாதத்திற்கு மேலாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.
இப்பல்கலை நிர்வகிக்கும் கமிட்டியும் அடுத்தடுத்து மாற்றப்படுவதால் நிதி அதிகரிப்பு முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் தொடர்ந்து சிக்கல் உள்ளது. குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்களும் பாதிக்கின்றனர். ஓய்வு பேராசிரியர்களின் பென்சன், பணப்பலன்களை பெறுவதில் அலைக்கழிப்படுகின்றனர். பணி ஓய்வு பெற்று 5 ஆண்டுக்கும் மேலாகியும் பென்சன் நான் வாங்க முடியவில்லை.
வழக்கு தொடர்ந்தும் கிடைக்கவில்லை. இப்பல்கலையில் பொறுப்பு அதிகாரிகளும் பொறுப்பாக பதிலளிக்காத சூழலில் நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்படுகின்றன. துணைவேந்தர் இல்லாத சூழலை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். துணைவேந்தர் இல்லாத நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி சிண்டிகேட், செனட் உறுப்பினர் நியமினம் போன்ற பிற பணிகளும் பாதிக்கின்றன. துணைவேந்தர் காலியிடத்தை உடனடியாக நிரப்புவதே தீர்வு'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT