Published : 02 Nov 2024 02:22 AM
Last Updated : 02 Nov 2024 02:22 AM
சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி தேர்வு பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட உள்ளது. அடுத்த தேர்வு, புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக முதுகலை ஆசிரியர் தேர்வு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு, ஆகஸ்டில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, விரைவில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இறுதிசெய்யப்பட உள்ளது. அடுத்த தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT