Published : 30 Oct 2024 12:33 AM
Last Updated : 30 Oct 2024 12:33 AM

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 520 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார் ஆளுநர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 39-வது பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், துணைவேந்தர் எம்.செல்வம் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தர் எம்.செல்வம் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 430 ஆய்வு மாணவர்களுக்கு முனைவர் பட்டம், 90 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் என மொத்தம் 520 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பாராட்டினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆய்வுமன்றத் தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறைச் செயலருமான ந.கலைச்செல்வி முதன்மை விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:அனைத்து துறையிலும் வளர்ச்சி பட்டம் பெறும் மாணவர்கள், தங்களது ஆசிரியர், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவற்றில் மற்ற நாடுகளை எதிர்பார்க்காமல், 2047-ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

புதியதோர் உலகம் செய்வோம் என பாரதிதாசன் கூறியதை அடிப்படையாகக் கொண்டு, அறிவியல், தொழில்நுட்பத்துறையில் மேம்பாடு அடைந்தால், நாம் சிறந்த நிலையை அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பல்கலை. பதிவாளர் ஆர்.காளிதாசன் மற்றும் செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன் இவ்விழாவில் பங்கேற்கவில்லை.

ஆளுநரிடம் மனு... விழாவில், முனைவர் பட்டம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த எஃப்.இஸ்ரேல் இன்பராஜ் என்பவர், ஆளுநர் ரவியிடம் ஒரு மனுவை வழங்கினார். ஆளுநரும் அந்த மனுவைப் பெற்று, தனது உதவியாளரிடம் வழங்கினார். இதுகுறித்து இஸ்ரேல் இன்பராஜ் கூறும்போது, "பாரதிதாசன் பல்கலை.யில் ஆராய்ச்சித் துறையினர், மாணவர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆன்லைனில்தான் வெளியிட வேண்டும், பிரின்டட் ஜர்னலில் வெளியிடக்கூடாது என்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டியில் அப்படி ஒன்றும் குறிப்பிடவில்லையே என்று கேட்டால், சரியான பதில் இல்லை. முனைவர் பட்டம் படிக்க 4 ஆண்டுகள் போதுமான நிலையில், இங்கு முனைவர் பட்டம் பெறுவதற்கு 6 முதல் 9 ஆண்டுகள் வரையாகிறது. பல்கலைக்கழக ஆராய்சித் துறையினர் மாணவர்களை வேண்டுமென்றே அலைக்கழிக்கின்றனர்.

இதுதொடர்பாக பலமுறை பல்கலை. நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரம் ஆளுநரின் கவனத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மனு வழங்கினேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x