Published : 27 Oct 2024 04:12 PM
Last Updated : 27 Oct 2024 04:12 PM
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 15,393 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக பட்டங்கள் வழங்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 45-வது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்த விழாவில் 1 லட்சத்து 15,393 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் தரப்பட்டது. அவற்றில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 68 மாணவர்கள் மற்றும் பிஎச்டி முடித்த 435 முனைவர்கள் என மொத்தம் 503 பேருக்கு ஆளுநர் ரவி நேரடியாக தங்கப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினர். மீதமுள்ள மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகள் வாயிலாகவும் பட்டங்கள் அளிக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய அங்கீகார ஆணையத்தின் தலைவர் அனில் டி சகஸ்கரபுத்தே பேசும்போது, ‘‘தேசிய கல்விக் கொள்கை-2020 அமல் செய்யப்பட்டு கல்வியில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக தாய்மொழி வழியிலான கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ் உட்பட உள்ளூர் மொழிகளிலும் பொறியியல் படிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நமது நாட்டில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் உதவி கொண்டு காரணமாக பல்வேறு தரவுகளை இணையதளம் மூலம் எளிதில் பெற முடிகிறது. புதிய கண்டுபிடிப்புகளில் இந்திய மாணவர்கள் உலகளவில் 81-வது இடத்தில் இருந்தனர். கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சியால் 39-வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 10 இடத்துக்குள் நம் இந்திய மாணவர்கள் வருவார்கள். அதேபோல், இந்தியாவில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு வெறும் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது 300 சதவீதம் அதிகமாகும்.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, சூரிய சக்தி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் போல நாடு முழுவதுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் தரவுகளை சேகரிக்க ஆப்பார் (Apaar-Automated Permanent Academic Account Registry) எனும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் ஒரு மாணவர் எங்கு பயின்றாலும் முழு விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மாணவருக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம் மாணவர்களின் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும். இதன்மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி படிக்க செல்லும்போது தங்கள் சான்றிதழ்களின் நகலை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. இந்த வசதி முழு பயன்பாட்டுக்கு வரும்போது மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜே.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே துணைவேந்தர்கள் நியமனம் உட்பட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கு இடையே முரண்கள் நிலவி வருகின்றன. அதன்காரணமாக ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
அதன்படி நேற்றைய பட்டமளிப்பு விழாவிலும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தார். மேலும், துணைவேந்தர் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 2-வது பட்டமளிப்பு விழா இதுவாகும். ஒருங்கிணைப்புக் குழுவே தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT