Published : 25 Oct 2024 04:06 AM
Last Updated : 25 Oct 2024 04:06 AM

அகில இந்திய தொழில் தேர்வில் தமிழக ஐடிஐ மாணவர்கள் 29 பேர் முதலிடம்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார்ஐடிஐ-களில் பயிற்சி பெற்று அகில இந்திய தொழில் தேர்வில்முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவியர், பயிற்றுநர் ஆகியோர்முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு ஐடிஐ-கள் ரூ.2,877.43 கோடி செலவில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

ஐடிஐகளுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. 2023-24-ம் கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த ஆக.12 முதல் செப்.9-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு ஐடிஐயில் படிக்கும் 26,236 மற்றும் தனியார் ஐடிஐயில் படிக்கும் 19,097 பேர் என மொத்தம் 45,333 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வில், 41,591 பேர் (91.74%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், தமிழகத்தில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இண்டஸ்ட்ரியல் ரொபாடிக்ஸ் தொழிற் பிரிவில் வேப்பலோடை ஐடிஐ மாணவன் என்.அந்தோணிசேசுராஜ் மற்றும் திருச்சி, அரசு ஐடிஐ மாணவி என்.மோகன பிரியா ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்டு ஆட்டோமேஷன் பிரிவில், சிதம்பரம் அரசுஐடிஐ மாணவி யு.பிரசிதா, வேப்பலோடை ஐடிஐ மாணவர் எஸ்.மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பம் தொழிற் பிரிவில் கோயம்புத்தூர் மகளிர் ஐடிஐ மாணவி கே.இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், பல்வேறு பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த 19 அரசு ஐடிஐ, 5 தனியார் ஐடிஐ மாணவ, மாணவியர் உட்பட 29 மாணவ, மாணவியர் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

பயிற்றுநர்களுக்கான பிரிவில், பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் ஐடிஐயைச் சேர்ந்த வி.ஸ்வேதா, வெல்டர் தொழிற்பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். 29 மாணவ, மாணவியர் மற்றும்1 பயிற்றுநர் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன்ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசு ஐடிஐக்களை தரம் உயர்த்த டாடா டெக்னாலஜீஸ் உடன் கைகோத்து பயணத்தை தொடங்கினோம். இன்று, ஐடிஐக்களுக்கான அகிலஇந்திய தொழிற் தேர்வுகளில் முதலிடம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 29 மாணவ, மாணவியரையும் ஒரு பயிற்றுநரையும் பார்த்தபோது பெருமிதத்தால் பூரித்துப் போனேன். அதிலும் கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்றால் அதில் பெரும்பாலானோர் மாணவிகள். இதுவே திராவிட மாடலை கேள்வி எழுப்பும் அந்த வீணர்களுக்கான பதிலடி’’என புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x