Last Updated : 21 Oct, 2024 08:23 PM

 

Published : 21 Oct 2024 08:23 PM
Last Updated : 21 Oct 2024 08:23 PM

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் கூடுதலாக ரூ.56.5 கோடியில் 4 தளங்கள் கட்ட அனுமதி

அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (கோப்புப் படம்)

சென்னை: சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் கூடுதலாக ரூ.56.5 கோடியில் 4 தளங்கள் கட்டுவதற்கும், ரூ.7.59 கோடியில் உபகரணங்கள் வாங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (அக்.21) மாலை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்தியாவின் 3-வது பழமையான பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தென்னிந்தியாவின் முதல் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகும். இம்மருத்துவக் கல்லூரி 1953 முதல் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசு பல் மருத்துவக்கல்லூரி. பல் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றிலும் இக்கல்லூரி சிறந்த மையமாக உள்ளது.

இக்கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பயனாளிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, ரூ.56.5 கோடியில் தற்போதுள்ள கட்டிடத்துடன், கூடுதலாக 4 தளங்கள் கட்ட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது ஒரு தளத்துக்கு 33,600 சதுர அடி பரப்பளவை உருவாக்கி, மொத்தமாக 1,34,400 சதுர அடியாக இருக்கும். புதிதாக கட்ட இருக்கும் தளங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் 100 புதிய பல் மருத்துவ நாற்காலிகள் ரூ.7.59 கோடியில் வாங்குவதற்கு தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியானது பல் கட்டும் துறை, வாய்வழி நோயியல், பொது சுகாதார பல் மருத்துவம், பல் ஈறு அறுவை சிகிச்சை துறை போன்ற துறைகளையும் வலுப்படுத்தும்.

கடந்த 3 ஆண்டுகளாக அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வருகைதரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் இந்த ஆணையின்படி அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பயனாளிகளின் தரமான பாதுகாப்பான பல் சிகிச்சை மேம்படும். இக்கல்லூரியை இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவ கல்லூரியாக மாற்றுவதற்கான பயணத்தில் இது ஒரு மைல்கல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x