Published : 12 Jun 2018 10:37 AM
Last Updated : 12 Jun 2018 10:37 AM
ப
த்தாம் வகுப்புடன் மாணவர்களுக்கு விடுமுறை என்ற ஒன்று முடிந்துவிடுகிறது. அதன் பின்னான விடுமுறை பள்ளி நாட்களின் நீட்சியே. குறிப்பாக, 12-ம் வகுப்பின் விடுமுறை. மாணவர்கள் வாழ்வில் என்னவாகப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பது, 12-ம் வகுப்புக்கும் கல்லூரிக்கும் இடைப்பட்ட விடுமுறை நாட்கள்தாம். அப்போது, என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும், எப்படி அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள், அறிவுரைகளாக மாணவர்களின் மீது திணிக்கப்படும். தெளிவும் பெரிய உந்துதலும் இல்லாத மாணவர்களுக்கு, அதை எதிர்கொள்வது மிகவும் கடினம்.
உங்களுக்கு ஏற்ற படிப்பு ஏது?
மாணவர்களின் அறிவை வளர்ப்பதை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு பள்ளிப் படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும். சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அறிவுடனும் திறனுடனும் மாணவர்களைத் தயார் செய்யும் விதமாகக் கல்லூரிப் படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாகப் பொறியியல் படிப்புகள்.
அடிப்படையில் பொறியியல் படிப்பில் நான்கு பிரிவுகளே உள்ளன. ஆனால், இன்று தேவைக்கு ஏற்ப, அவை பிரிந்தும் இணைந்தும் 40 பிரிவுகளுக்கும் மேலாகிவிட்டன.
பொதுவாக, தேவையின் அடிப்படையிலோ மற்றவர்களின் ஆலோசனைப்படியோ நண்பர்களின் தேர்வின்படியோதான் பொறியியல் பிரிவுகள் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால், அது சரியான வழிமுறை அல்ல. உங்கள் இயல்புக்கும் திறனுக்கும் விருப்பத்துக்கும் பொருத்தமான பிரிவைத் தேர்ந்தெடுப்பதே நன்று. அதுவே வாழ்நாள் முழுவதும் நிம்மதியையும் திருப்தியையும் தரும்.
உங்களுடைய இயல்புக்கு ஏற்ற பொறியியல் பிரிவைக் கண்டறிவது இப்போது மிகவும் எளிது. ‘Aspiring Minds’ எனும் நிறுவனம் அதை எளிதாக்கி உள்ளது. ‘https://www.aspiringminds.com/’ என்ற இணையதளத்துக்குச் சென்று மனோவியல் மதிப்பீடு (psychometric assessment) தேர்வு எழுதுவதன் மூலம் பொறியியலில் உங்களுக்கு ஏற்ற துறையை அறிந்துகொள்ளலாம்.
எங்கே படிக்கலாம்?
தனியார் பொறியியல் கல்லூரிகள் தோன்றும்வரை மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள், எடுக்காதவர்கள் என இரண்டு வரையறைக்குள் அடக்கிவிடலாம். ஆனால், அதன்பின் வசதிபடைத்தவர்கள் என்று புதிதாக ஒரு வரைமுறை உருவாகிவிட்டது.
நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள், ஐ.ஐ.டி. போன்ற அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். வசதி கொண்டவர்கள், தங்களுக்கு விருப்பமான பிரிவைச் சிறந்த தனியார் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். மூன்றாமவர்கள் தாங்கள் விரும்பும் பிரிவை கவுன்சலிங் மூலம் கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க நேரிடும்.
கூடுமானவரை தங்கள் இயல்புக்கு ஏற்ற படிப்பை, கலந்தாய்வில் கிடைக்கும் கல்லூரிகளில் சிறந்த ஒன்றில் சேர்ந்து படிப்பதே உகந்தது.
ஆன்லைன் கலந்தாய்வு
கடந்த ஆண்டுவரை, பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்காகச் சென்னைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. சென்னையைப் பார்த்திராத கிராமப்புற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அது மலைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இனி, மாணவர்கள் சென்னைக்கு வரத் தேவை இல்லை. ‘https://tnea.ac.in/adata/index.php‘ என்ற இணையதளத்துக்குச் சென்றால்போதும் மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய படிப்பையும் கல்லூரியையும் வீட்டில் இருந்தபடியோ அருகிலிருக்கும் TNEA செண்டரில் இருந்தோ தேர்வு செய்துவிட முடியும். எப்படி அதில் பங்கேற்பது என்பதை ‘https://tnea.ac.in/adata/instruction.pdf’ என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கல்லூரிக்கான வரையறை படிப்பை மட்டும் சார்ந்தது அல்ல. கல்லூரியின் சூழலையும் உள்ளடக்கியது. கலந்தாய்வு செல்லும் முன் கல்லூரியின் தரம் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்வது நல்லது. NIRF (National Instiute Ranking Framework) ரேங்கிங், இந்திய அளவில் கல்லூரியின் தரம் பற்றித் தெரிந்துகொள்ள உதவும். ‘Times Higher Education Ranking’, ‘QS Ranking’ போன்றவை உலக அளவில் கல்லூரியின் தரம் பற்றி அறிந்துகொள்ள உதவும்.
இப்போது பொறியியல் படிப்பு சர்க்கியூட் கோர்சஸ் (‘Circuit Courses’), நான்-சர்க்கியூட் கோர்சஸ் (‘Non-Circuit Courses’) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள். மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் நான்-சர்க்கியூட் வகைக்குள் அடங்கும்.
வேலைவாய்ப்பின் அடிப்படையில் சர்க்கியூட் வகை படிப்புதான் பலருடைய விருப்புத் தேர்வாக உள்ளது. ஆனால், இன்று எந்தப் பிரிவுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்ற அடிப்படையில் படிப்பைத் தேர்வு செய்வதைவிட நான்கு வருடங்கள் கழித்து எந்தப் பிரிவுக்குத் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜன்ஸ் (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்புகளைத் தேர்வுசெய்து படிப்பது வளமான எதிர்காலத்தை உருவாக்கும். குறிப்பாக ‘Information Science in Engineering’, ‘Information Science and Technology’ போன்றவை.
இடம் கிடைக்கவில்லையா?
நல்ல கல்லூரிகளில்தான் வளாக நேர்காணல் நடைபெறும், அங்குதான் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது போன்ற கற்பிதங்கள் எல்லாம் இன்று நீர்த்துப் போய்விட்டன. இன்று எல்லா பெரிய நிறுவனங்களும் ‘Hackathon’ எனும் பொறியியாளருக்கான வேட்டையை ஆண்டுக்கு ஒரு முறை நடத்துகின்றன. மேலும் ‘Aspiring Minds’ நடத்தும் ‘AMCAT’ தேர்வில் பெறும் மதிப்பெண் பெரும்பாலான நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, வேலைவாய்ப்பு என்பது கல்லூரியைச் சார்ந்த ஒன்று என்ற நிலை மாறி மாணவர்களின் திறன்சார்ந்த ஒன்றாகிவிட்டது.
மேலும் கற்றலைப் பொறுத்தவரை, கல்லூரியைத் தாண்டிக் கற்றுக்கொள்ளவும் திறனை வளர்த்துக்கொள்ளவும் Udacity, Udemy, Coursera போன்ற பல ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. கூகுள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் போன்ற பெரும் நிறுவனங்கள், ‘Udacity’ மூலம் பட்டப்படிப்புகளை நடத்துகின்றன. அதில் கூகுள் வழங்கும் A.I. டிகிரி சான்றிதழ் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று மட்டுமல்ல, வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒன்று.
தடை ஏதும் இல்லை
மாணவர்களின் கனவு நனவாக இன்று தடை எதுவும் இல்லை என்றே சொல்லலாம். வசதி இல்லை என்றால் அதை வங்கிக் கடன் மூலம் ஈடுசெய்துகொள்ளலாம். கல்லூரி தரமானது இல்லையென்றால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஈடு செய்துகொள்ளலாம். வளாக நேர்காணல் இல்லையென்றால் ஹேக்கத்தான், நேனோ டிகிரி (‘Nano Degree’), அம்கேட் மதிப்பெண்கள் போன்றவற்றின் மூலம் ஈடுசெய்துகொள்ளலாம். படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உந்துதலும் மட்டுமே மாணவர்களுக்குத் தேவை. அவற்றை ஈடு செய்ய எதனாலும் முடியாதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT