Published : 15 Oct 2024 01:34 PM
Last Updated : 15 Oct 2024 01:34 PM

பிரான்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி வழங்கும் நிலையான உயிரி உற்பத்தி குறித்த படிப்பு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), பிரான்சில் உள்ள டூர்ஸ் பல்கலைக்கழகத்துடன் (University of Tours) இணைந்து ‘உயர்மதிப்புள்ள பைட்டோகெமிக்கல்களின் நிலையான உயிரி உற்பத்தி’ தொடர்பான படிப்பை வழங்க உள்ளது.

உயர்செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியுடன் நிலையான வளர்ச்சிக்கான உயிரி தயாரிப்புகளை, மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘பயோஇ3 கொள்கையை’ இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தாவர மற்றும் நுண்ணுயிரிகளுக்கான உயிரித் தொழிற்சாலைகளில் இருந்து, அதிக மதிப்புவாய்ந்த தாவரங்களால் ஆன இயற்கைப் பொருட்களைத் தயாரிக்கும் ‘நிலையான உயிரி உற்பத்தி’ தொடர்பாக பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் பல்வேறு வணிகப் பயன்பாடுகளுக்கான பைட்டோகெமிக்கல் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை நிறைவு செய்வதுடன் இயற்கையையும் பாதுகாக்க இந்த பாடநெறி உதவிகரமாக இருக்கும்.

சென்னை ஐஐடி-க்கு வெளியே இருப்பவர்களுக்காக இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தாவர உயிரித் தொழில்நுட்பம்/பயோ பிராசஸ் இன்ஜினியரிங்/ உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் (பிடெக், எம்டெக், பிஎச்டி) மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தாவர செல் மற்றும் நுண்ணுயிர் தொழில்நுட்பம், நொதித்தல் தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

30 இடங்களைக் கொண்ட இந்தப் படிப்பில் சேருவோர் நேரில் வந்து பங்கேற்க வேண்டியிருக்கும். 2024 நவம்பர் 22 வரை விண்ணப்பப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பின்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளன- https://shorturl.at/23b9H

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x