Published : 15 Oct 2024 04:58 AM
Last Updated : 15 Oct 2024 04:58 AM

ஜெட் வேகத்தில் டிஎன்பிஎஸ்சி; மந்தகதியில் இயங்கும் டிஆர்பி: ‘டெட்' உட்பட 3 தேர்வுகளை நடத்துவது எப்போது?

மாதிரிப் படம்

சென்னை: இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடாமல் காலதாமதம் செய்வது தேர்வர்களைகடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக போட்டித் தேர்வுநடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக (டிஆர்பி) தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது.

தேர்வுக்கு தயாராக முடியும்: ஓராண்டில் காலியாகவுள்ள அரசு பணியிடங்களுக்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் விவரம், அதற்கான அறிவிப்பு, தேர்வு தேதி மற்றும் முடிவுகள் வெளியாகும் விவரம் உள்ளிட்டவை அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதனால் தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராக வசதியாகவும் உள்ளது. அந்த அட்டவணைப்படி டிஎன்பிஎஸ்சியும் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதேபோல் அடுத்தஆண்டுக்கான (2025) தேர்வு அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி தற்போதே வெளியிட்டுவிட்டது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி ஜெட் வேகத்தில் செல்ல, அதற்கு நேர்மாறாக மந்தகதியில் டிஆர்பி செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிடுவதுபோல டிஆர்பி-யும் கடந்த சில ஆண்டுகளாக வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால்,நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்தும் இன்னும் 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கூட வெளியாகவில்லை. குறிப்பாக டெட் தேர்வு, முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு ஆகியவை முறையே கடந்த ஏப்ரல், மே, செப்டம்பரில் அறிவிப்புவெளியாகி இருக்க வேண்டும்.

தேர்வர்கள் அச்சம்: ஆனால் அக்டோபர் மாதம் ஆகியும்எந்த அறிவிப்பும் இல்லை. இதேபோல் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டும் இன்னும் தேர்வு நடத்தவில்லை. தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வேண்டும்.அதுவும் முறையாக அறிவிக்கப் படுமோ அல்லது காலதாமதமாகுமோ என தேர்வர்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து டிஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர் வர்கள் கூறும்போது, ‘‘தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட மாதக்கணக்கில் டிஆர்பி தாமதம் செய்வதை ஏற்க முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுடன் ஒப்பிடும்போது டிஆர்பி தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

எனவே, விடைத்தாள் மதிப்பீடு, தேர்வு முடிவு வெளியீடு, இறுதித்தேர்வு பட்டியல் வெளியீடு, பணிநியமனங்கள் என என அனைத்து பணிகளையும் விரைவாக முடித்துவிடலாம். எனவே, டிஆர்பி-யில்நிலுவையில் உள்ள 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு விரைவில் தேர்வுகளை நடத்திமுடிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x