Published : 05 Oct 2024 09:44 PM
Last Updated : 05 Oct 2024 09:44 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ரூ.2 கோடியில் ‘மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை செயல்படுத்தும் விதமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும். மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பின் கீழ் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் குறிஞ்சி, முல்லை உட்பட 5 குழுக்களாக பிரிக்கப்படுவர். இக்குழு அமைப்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம்பெறுவர். ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்கள் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டு அதன் விவரம் எமிஸ் தளத்தின் மூலமாக கண்காணிக்கப்படும்.
இதுதவிர பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் என்ற மாணவர் குழு அமைப்புக்கான பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் குழுவானது ஒதுக்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் உயர்வகுப்பில் பயிலும் மாணவர்களில் இருவர் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல், வகுப்பு வாரியாகவும் அந்தக் குழுவின் மாணவர் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், தலைமை பொறுப்பு ஆசிரியர், குழுவுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் நவமபர் 14-ம் தேதி நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அந்த நிகழ்வின் படங்கள், காணொலியை எமிஸ் தளத்தில் நவம்பர் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். அதிக புள்ளிகளைப் பெறும் குழுவானது அந்த மாதத்தின் வெற்றிக் குழுவாக அறிவிக்கப்பட்டு அதன் வண்ணக்கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கும் எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்த தகவல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT