Last Updated : 05 Oct, 2024 09:15 PM

 

Published : 05 Oct 2024 09:15 PM
Last Updated : 05 Oct 2024 09:15 PM

சாரணர் இயக்குநரக வைர விழாவை நடத்த 4 குழுக்கள் - தமிழக பள்ளிக் கல்வித் துறை

சென்னை: பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழாவை சிறப்பாக நடத்துவதற்காக 4 குழுக்கள் அமைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடத்தப்பட உள்ளது. இதை தேசிய அளவிலான கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரியாக நடத்திட திட்டமிட்டு அதற்காக ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கி தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்த வைர விழாவை நடத்துவதற்காக திட்டக்குழு, பெருந்திரளணி சபை, தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக் குழு ஆகிய 4 குழுக்கள் அமைப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் சோ.மதுமதி இன்று வெளியிட்ட அரசாணை விவரம்: பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழாவை நடத்துவதற்காக 4 குழுக்கள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு அதிகாரியாக சாரணர் இயக்குநரகத்தின் மாநில செயலாளரும், தொடக்கக் கல்வி இயக்குநருமான பூ.ஆ.நரேஷ் நியமிக்கப்படுகிறார்.

இதுதவிர பெருந்திரளணி சபை குழுவுக்கு ஆளுநர் தலைமை தாங்குவார். அதற்கடுத்தபடியாக முதல்வர் இருப்பார். திட்டக்குழுவில் சாரணர் இயக்குநரகத்தின் மாநில ஆணையர் அறிவொளி தலைமை தாங்குவார். இதேபோல், தொழில்நுட்பக் குழுவில் 44 நிர்வாகிகளும், செயல்பாட்டுக் குழுவில் 51 நிர்வாகிகளும் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவில் 86 வெளிநாடுகளில் இருந்து சாரணர் இயக்குநரகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், சிறப்பு விருந்தினர்களாக குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x