Published : 03 Oct 2024 05:06 AM
Last Updated : 03 Oct 2024 05:06 AM

கேட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அதேபோல பல்வேறு பொதுத் துறைநிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம்மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம் தேதிகளில் பாடவாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்தமுறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள்8 மண்டலங்களாகப் பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (அக். 3) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைதளத்தில் சென்று துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x