Published : 02 Oct 2024 06:41 AM
Last Updated : 02 Oct 2024 06:41 AM

ஆசிரியர் கல்வியில் யோகா, உடற்கல்வி பாடங்கள்: என்சிடிஇ தலைவர் பங்கஜ் அரோரா தகவல்

சென்னை: ஆசிரியர் கல்வியில் யோகா, கலை, சம்ஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் தலைவர் பங்கஜ் அரோரா கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11-வதுபட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான ஆர்.என்.ரவிதலைமை தாங்கினார். இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் முன்னிலை வகித்தார். பி.எட், எம்.எட் படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.

மேலும், ஆராய்ச்சி பட்டம்பெற்ற 66 பேர் ஆளுநரிடம் பட்டச்சான்றிதழை பெற்றுக்கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழா மூலம்48,510 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) தலைவர் பங்கஜ் அரோரா உரையாற்றியதாவது:

சமுதாய மாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல் மிக்கது ஆசிரியர் பணி. அந்த வகையில் நமது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து வரும் சூழலில் அதற்கேற்ப மாணவர் அறிவை செம்மைப்படுத்த இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

மாறிவரும் கல்விச்சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேசியகல்விக்கொள்கை - 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் தொலைநோக்கு சிந்தனையை நடைமுறைப்படுத்த என்சிடிஇ உறுதிபூண்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்விதிட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

இத்திட்டத்தில், யோகா, கலை,சம்ஸ்கிருதம், உடற்கல்வி உள்ளிட்டவை இடம்பெறும். மூத்த ஆசிரியர்கள், புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர்கல்வியில் தேசிய வழிகாட்டுதல் பயிற்சி திட்டமும், ஆசிரியர்களின் பணித்திறனை தொடர்ந்துமேம்படுத்தும் வகையில் தேசியஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்டமும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளரும், துறை செயலருமானபிரதீப் யாதவ் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கே.ராஜசேகரன், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x