Last Updated : 01 Oct, 2024 08:53 PM

 

Published : 01 Oct 2024 08:53 PM
Last Updated : 01 Oct 2024 08:53 PM

அரசுப் பள்ளிகளில் அக்.14 முதல் 16 வரை குறுவள அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள்!

கோப்புப் படம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் குறுவள அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் அக்டோபர் 14 முதல் 16-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டிலும் 1-ம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி அளவிலான போட்டிகள் முடிவுற்றதை அடுத்து தொடர்ந்து குறுவளப் போட்டிகள் அக்டோபர் 14 முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக பள்ளி அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் அக்டோபர் 17 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் கட்டாயம் பெற வேண்டும். வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் அடுத்தகட்டமாக மாவட்ட நிலையிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டிகளை நடத்துவதற்கு வட்டாரத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 414 வட்டாரத்துக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x