Published : 01 Oct 2024 05:17 AM
Last Updated : 01 Oct 2024 05:17 AM
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் ஜுன் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கட் ஆப்மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ),வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சிஎன்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், தேர்வு முடிந்த பிறகு செப்.11-ம் தேதி, கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6,720 ஆக உயர்ந்துள்ளது. முதலில் தேர்வு முடிவுஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் வந்துகொண்டிருப்பதால் குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்கள் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
10 ஆயிரம் பணியிடங்கள்: குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்பட உள்ளது. குரூப்-4 கேடரில் உள்ள பதவிகள் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஒரு தேர்வில், அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் வரையில் அதிகரிக்க முடியும். அதேபோல், அத்தேர்வில் குறிப்பிட்ட கல்வித்தகுதியுடைய வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் வந்தாலும் அவற்றையும் சேர்க்க முடியும். அந்த வகையில், குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எத்தனை இடங்கள் வரும் என்பதை தற்போது குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஏறத்தாழ 10 ஆயிரம் பணியிடங்கள் வரலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் நடந்து முடிந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத்தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளன. குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்விலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT