Published : 28 Sep 2024 06:07 AM
Last Updated : 28 Sep 2024 06:07 AM
சென்னை: பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள், பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், பள்ளி பார்வை ஆய்வறிக்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அதன்பின் கூட்டத்தில் செயலர் மதுமதி பேசியதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். மேலும் வங்கி, தபால் நிலையங்கள் வாயிலாக தொடங்கப்படும் சேமிப்புக் கணக்கு பணிகளை கண்காணித்து அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல், பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக, நீண்ட காலமாக விடுப்பில் உள்ளமாணவர்களை கண்காணித்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெறாதபடி பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்களை நிர்ணயம் செய்யப்பட்ட கால அவகாசத்துக்குள் முடித்து திருப்புதல் தேர்வுகளை சரியாக நடத்தவேண்டும். அதனுடன் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT