Published : 19 Sep 2024 05:43 AM
Last Updated : 19 Sep 2024 05:43 AM
சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டுதரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 399 எம்பிபிஎஸ் இடங்கள், 727 பிடிஎஸ்இடங்கள் காலியாக இருந்தன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 23 பிடிஎஸ் இடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில்2 எம்பிபிஎஸ் இடங்கள் ஆகும். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,024 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 839 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், அரசு மற்றும்தனியார் கல்லூரிகளில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் 14-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநில ஒதுக்கீட்டில் இடம் பெற்ற 6 மாணவர்கள், அகிலஇந்திய கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று சென்றுவிட்டனர். மருத்துவ கல்லுாரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதால் காலியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவகல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கல்லுாரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 20-ம் தேதி காலை10 முதல் 23-ம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வில் பங்கேற்கலாம். இடஒதுக்கீடு விவரங்கள் 26-ம் தேதி வெளியிடப்படும். இடங்கள் பெற்ற மாணவர்கள் அக்டோபர்5-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT