Last Updated : 15 Sep, 2024 04:44 PM

 

Published : 15 Sep 2024 04:44 PM
Last Updated : 15 Sep 2024 04:44 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: அக்.7 முதல் 10 வரை நடைபெறும்

கோப்புப் படம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது கற்றல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் நடைபெறவுள்ள தேர்வுகளின் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல்கட்ட தேர்வு அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு: தேர்வுக்கான வினாத்தாள் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். இதையடுத்து தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்வும் 40 நிமிடங்களில் முடிக்கும் வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்தத் தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x