Published : 13 Sep 2024 08:47 PM
Last Updated : 13 Sep 2024 08:47 PM
சென்னை: “தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி, பதவி உயர்வுக்கு தகுதியானவை” என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நம் நாட்டில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில், தேசிய திறந்தநிலை பள்ளி வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த டிசம்பர் 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பானது அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை என்று பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்: “மறுபரிசீலனை செய்ததில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவையாகும். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT