Last Updated : 13 Sep, 2024 05:44 PM

 

Published : 13 Sep 2024 05:44 PM
Last Updated : 13 Sep 2024 05:44 PM

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு: தகுதிப் பட்டியலை அனுப்ப ஆதிதிராவிடர் நலத் துறை உத்தரவு

கோப்புப் படம்

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு தகுதியான அமைச்சுப் பணியாளர்கள் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென ஆதிதிராவிடர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். அதில் 2 சதவீத இடங்கள் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கொண்டு நிரப்பப்படுவது வழக்கமாகும். அதன்படி 2021 மார்ச் 1-ம் தேதி முதல் முதுநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியான அமைச்சுப் பணியாளர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து முதுநிலை ஆசிரியருக்கான கல்வித் தகுதியும், விருப்பமும் கொண்ட அமைச்சுப் பணியாளர்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் நபர்கள் ஒரே பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎட் படிப்புகளை படித்திருக்க வேண்டும். அவர்கள் மீது துறை சார்ந்து எவ்வித புகார்களும், நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாதவாறு உறுதி செய்துகொள்ள வேண்டும். அனைத்துப் பணிகளையும் முடித்து பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியலை மாவட்ட நல அலுவலர்கள் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x