Published : 11 Sep 2024 04:34 PM
Last Updated : 11 Sep 2024 04:34 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 3-வது கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ.10 கோடியில் 53 புத்தகங்கள், 90 லட்சத்து 45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை ஒரு கோடியே 31 லட்சத்து 68,048 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகம் செயப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை நெறிப்படுத்த நூல் வாசிப்பு உதவும். அதனால் வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 124 புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்பட உள்ளன. இதற்கான புத்தக தயாரிப்பு பணிமனைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அந்த பணிகள் முடிந்தபின்னர் சுமார் 2.2 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு தரப்படும். நடப்பு கல்வியாண்டிலேயே இந்த செயல்பாடுகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT